இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தீபிகா கக்கர். இவர், இந்தி டிவி நாடகங்களில் நடித்து பிரபலமானவர். அதேபோல் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 12-வது சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் ஆனார். இதனால் பாலிவுட் வட்டாரத்தில் மிக பிரபலமான நடிகையாக தீபிகா கக்கர் வலம் வந்தார். கடந்த 2010ஆம் ஆண்டில் ‘நீர் பரே தேரே நைனா தேவி’ என்ற சீரியலில் நடித்திருந்தார்.
பின்னர், 2011 முதல் 2017 வரை ஒளிபரப்பாகிய ‘சசுரல் சிமர் கா’ என்ற சீரியலில் நடித்தபோது, தன்னுடன் நடித்த ஷோயப் இப்ராஹிம் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இதற்காக அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இதன் பின்னர் தான், பிக்பாஸ் சீசன் வெற்றியின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார் தீபிகா.
இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு தான் தற்போது திரையுலகினரையும், ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த பதிவில், “சமீபத்தில் எனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால், மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்தேன். அப்போது, எனது கல்லீரலில் டென்னிஸ் பந்து அளவிலான சிறிய கட்டியை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர், அது புற்றுநோய் என உறுதி செய்யப்பட்டது. கடந்த சில வாரங்களாகவே எனக்கு மிகவும் கடினமான காலகட்டமாக இருந்தது” என்று பதிவிட்டுள்ளார்.கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், ”கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் 2-ஆம் நிலை புற்றுநோயை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். முழு நம்பிக்கையுடன் இதை எதிர்கொண்டு வருகிறேன். எனது குடும்பமும், உங்கள் அன்பும், பிரார்த்தனைகளும் எனக்கு துணையாக இருக்கின்றன” என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “இந்த புற்றுநோயானது, கல்லீரலில் உள்ள கட்டியில் மட்டுமே இருப்பதாகவும், எனவே அறுவை சிகிச்சை மூலம் இதை அகற்ற முடியும்” என்றும் தெரிவித்துள்ளனர்.