ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில், பல நூற்றாண்டுகள் பழமையான மற்றும் வியப்பளிக்கும் சடங்குகள் இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றன. குறிப்பாக திருமணத்தின்போது, மணமகன் மணமகளைப் போலவும், மணமகள் மணமகனைப் போலவும் உடை அணிந்து வழிபடும் வினோத வழக்கம் அங்குப் பல தலைமுறைகளாக பின்பற்றப்படுகிறது.
இந்தப் பாரம்பரியத்தின்படி, திருமணத்தின்போது மணமகன், மணமகளைப் போல சேலை, நகைகள் மற்றும் பிற அணிகலன்களை அணிந்து கொள்வார். அதே நேரத்தில், மணமகள் மணமகனை போல சட்டை மற்றும் பேன்ட் அணிவதுடன், ஆண் சிகை அலங்காரத்தையும் மேற்கொள்வார்.
கொலுகுலா கிராமத்தில் இந்தப் பழக்கம் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தக் கிராமத்தில், மணமக்கள் திருமணத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே இவ்வாறு தங்கள் உடைகளை மாற்றிக்கொண்டு தங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்குகிறார்கள். ஆடை மாற்றி மணமகள் வேடத்தில் இருக்கும் மணமகன், திருமண ஊர்வலத்தை முன்னின்று வழிநடத்திச் சென்று, பின்னர் தன் இஷ்ட தெய்வத்தை வணங்குகிறார்.
பிரகாசம் மாவட்டத்தில் உள்ள இந்தச் சடங்கு பல தலைமுறைகளாக நடைமுறையில் உள்ளது. இந்த கிராம மக்கள், இவ்வாறு தங்களைத் தங்கள் எதிர்பாலினமாக மாற்றிக்கொண்டு குலதெய்வத்தை அல்லது இஷ்ட தெய்வத்தை வணங்கினால், தங்கள் குடும்பத்தில் உள்ள அத்தனை காரியங்களும் நல்லவிதமாக நடக்கும் என்றும், தங்கள் வாழ்வில் எந்தத் தடையும் வராது என்றும் உறுதியாக நம்புகிறார்கள்.
இருப்பினும், இந்தச் சடங்கு முடிந்த பிறகு, மணமக்கள் தங்கள் சாதாரணத் திருமண உடைகளை அணிந்துகொண்டு, வழக்கமான முறைப்படி திருமணம் நடத்தப்படுகிறது. இந்த வினோதப் பழக்கம் இப்பகுதியில் உள்ள மக்களின் ஆழமான ஆன்மீக நம்பிக்கையையும், பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.



