உத்தரபிரதேசத்தின் லலித்பூரில் தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறில், குழந்தை கண்முன்னேன் சாலையில் ஒருவரையொருவர் உடல் ரீதியாக தாக்கிக் கொள்ளும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரின் சதார் கோட்வாலி பகுதியில் உள்ள நெடுஞ்சாலை மசௌரா அருகே, ஒரு தம்பதியினர் குழந்தையுடன் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர். இந்தநிலையில், திடீரென தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சாலையோரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு கணவர் மனைவியை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். இதற்கு மனைவி பிடிக்கொடுக்காததால் இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், குழந்தை கண்முன்னே, நடுரோட்டிலேயே மனைவியை கீழே தள்ளி கழுத்தை நெறித்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக சென்று அவர்களை தடுத்தனர். இருப்பினும், கணவன்-மனைவி இடையேயான சண்டைக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, உத்தரபிரதேச காவல்துறை இந்த விஷயத்தை அறிந்துகொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க லலித்பூர் காவல்துறைக்கு உத்தரவிட்டது. லலித்பூர் காவல்துறை, கோட்வாலி லலித்பூர் காவல் நிலைய அதிகாரியை விசாரித்து தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.