இந்தியா போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் தென்னை மரம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. அதில் கிடைக்கும் இளநீர், அதை விட பலன் தரக்கூடியது. இளநீர், இயற்கையாகவே சுத்தமானது. பல மருத்துவ குணங்கள் நிரம்பிய இயற்கை பானமாகவும் இளநீர் இருந்து வருகிறது. .
கடுமையான வெயில் காலங்களில், உடல் சூட்டை தணிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இளநீர் முக்கிய பானமாக உள்ளது. அதேபோல், கோடை காலத்தில் பெரும்பாலானோர் தேடுவது இந்த இளநீரைத்தான். இது சுவை மட்டுமின்றி, பல்வேறு உடல்நல நன்மைகளையும் வழங்குகிறது.
இதில் சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து போன்ற பல முக்கியமான கனிமங்கள் நிறைந்துள்ளன. இதனால் உடல் வெப்பம் குறைவதுடன், அல்சர், மலச்சிக்கல், வாய்ப்புண் போன்ற பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்கிறது.
இளநீரில் இத்தனை நன்மைகள் இருந்தாலும், அது எப்படி உருவாகிறது என்பது பலருக்கும் தெரியாது. இதன் ஆரம்ப கட்டம் மரத்தின் வேர்கள் வழியாக துவங்குகிறது. மண்ணில் இருந்து தண்ணீரை உறிஞ்சும் தென்னையின் வேர்கள், அந்த நீரை சைலம் எனப்படும் தொக்குயிரணுக் குழாய்கள் வழியாக மேலே கொண்டு செல்கின்றன.
இந்த நீர், வளர்ச்சியில் உள்ள தேங்காய்க்குள் சென்று, விதைக்கு ஊட்டமளிக்கும் திரவ எண்டோஸ்பெர்மாக மாறுகிறது. இதைத்தான் இளநீர் என்று நாம் கூறுகிறோம். இதில், வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களால் நிறைந்திருக்கும். இவ்வாறு உருவாகும் இளநீர், வெறும் சுவைக்கு மட்டுமின்றி, நம் உடலுக்கு சக்தியையும், ஆரோக்கியத்தையும் வழங்கும் தன்மை கொண்டது.