தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.. திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறப்பட்டாலும், காங்கிரஸ் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்று திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.. அந்த வகையில் தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் தனது கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் கடந்த 3 நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறது.. அப்போது திமுக கூட்டணியில் இருப்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது..
பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் திமுக கூட்டணிக்கு எதிராக கருத்து கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணியில் இருப்பதால் எந்த பலனும் இல்லை என்றும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்..
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டாலும் பரவாயில்லை என்றும், தவாக மாவட்ட செயலாளர்கள் வேல்முருகனிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது..
5 ஆண்டுகளில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று அக்கட்சியினர் அதிருப்தியில் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. கூடுதல் தொகுதிகள் வழங்கப்படவில்லை என்றும் வாரியங்களில் பதவி வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்..
தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு சட்டமன்ற தீர்மானத்தை திமுக நிறைவேற்றவில்லை.. சாதிவாரி கணக்கெடுப்பு என்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தீர்மானத்தையும் திமுக நிறைவேற்றவில்லை.. இது போன்ற 10 கோரிக்கைகளை திமுக தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் திமுக நிறைவேற்றவில்லை என்று பல மாவட்ட செயலாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது..
அதே போல் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த நமக்கு பாஜக உடன் கூட்டணி வைக்க என்ன பிரச்சனை என்றும், கட்சிக்கு தேவையான மரியாதையையும் திமுக அளிக்கவில்லை என்று தவாவினர் வேல்முருகனிடம் குமுறி உள்ளனராம்.. வரும் சட்டமன்ற தேர்தலில் கூட தவாகவுக்கு ஒரே ஒரு சீட் மட்டுமே கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது..
மநீம, தேமுதிக போன்ற கட்சிகளுக்கு அதிக சீட் கொடுக்க முன் வருகின்றனர், ஆனால் தவாகவுக்கு ஏன் ஒரு தொகுதி மட்டும் கொடுக்கின்றனர் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.. எனினும் மாவட்ட செயலாளர்களின் கருத்துகள் அனைத்தையும் கேட்ட வேல்முருகன், எந்த பதிலையும் அளிக்கவில்லையாம்.. மேலும் சில மாவட்ட செயலாளர்களின் கருத்துகளை கேட்க இருப்பதால் அதன்பின்னர் வேல்முருகன் தனது முடிவை தெரிவிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஒருவேளை அவர் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையக் கூடும் என்று கூறப்படுகிறது..



