நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ. 21.29 கோடி கடனை லைகா நிறுவனம் அவருக்குப் பதிலாக செலுத்தியிருந்தது. இந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தும் வரை, விஷாலின் எதிர்கால படங்களின் டிஜிட்டல், ஒளிபரப்பு உள்ளிட்ட முதன்மை உரிமைகள் லைகாவுக்கு சொந்தமாக இருக்கும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால், ஒப்பந்த நிபந்தனைகளை மீறி, சில பட உரிமைகளை மூன்றாம் தரப்புக்கு மாற்ற முயன்றதாக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லைகா புகாரில் முகாந்திரம் இருப்பதாகக் குறிப்பிட்டது. மேலும் விஷால் ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் லைகாவுக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், முழு தொகையும் செலுத்தப்படும் வரை விஷாலின் புதிய படங்களின் உரிமைகள் லைகா நிறுவனத்திடமே இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக விஷால் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், விசாரணை நடைபெறும் அமர்வில் இருந்த நீதிபதி ஒருவர் விலகியதால், வழக்கு புதிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் இன்று விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு விஷால் தரப்பு, ஆண்டுக்கு 30% வட்டியுடன் பணத்தை திரும்ப செலுத்த உத்தரவிட்ட உத்தரவு சட்ட விரோதமானது என்று வாதிட்டார்.. மேலும் லைகா நிறுவனம் கூறியது போல் தான் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை எனவும் விஷால் தரப்பு தெரிவித்தது.. அப்படியானால் திவாலானவர் என்று அறிவிக்க தயாராக இருக்கிறீர்களா என்று விஷால் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்..
மேலும் “ 30% வட்டி என்பது மிகவும் அதிகம்.. இப்படி சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது.. என்று தெரிவித்தனர்.. லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கடனை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் ரூ.10 கோடி பணத்தை டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டனர்.. மேலும் இதுகுறித்து லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்..



