நம் வீட்டு சமையலறையில் தவிர்க்க முடியாத பொருள் என்றால், அது கேஸ் அடுப்பு தான். இதை தினசரி பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால், தொடர்ந்து பயன்படுத்துவதால் அதில் எண்ணெய் கறைகள், அழுக்குகள் படிந்து, அடுப்பில் துரு ஏற்படுவது இயல்பானது தான். அந்த துரு ஒரு தடவை ஏற்பட்டு விட்டால், அதை சுத்தம் செய்வது கடினமாக இருக்கும் என நினைப்பீர்கள்.
ஆனால் அதற்கெல்லாம் பதிலாக, வீட்டிலேயே கிடைக்கக்கூடிய சில இயற்கை பொருட்களை பயன்படுத்தி, கேஸ் அடுப்பில் பிடித்திருக்கும் துருவை சுலபமாக நீக்க முடியும்.
வினிகர் + பேக்கிங் சோடா :
ஒரு கப்பில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவும், தேவையான வினிகரும் சேர்த்து கலக்குங்கள். இந்த கலவையை துரு பிடித்த இடங்களில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின்னர், ஒரு பழைய டூத் பிரஷ் அல்லது ஸ்பாஞ்ச் தேய்த்தால், பளிச்சென்று மாறும்.
உருளைக்கிழங்கு + உப்பு :
பாதியாக நறுக்கப்பட்ட உருளைக்கிழங்கின் மேல் சிறிது உப்பைத் தூவி, அதை துரு அடித்த பகுதிகளில் தேய்க்க வேண்டும். பின்னர், 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவி, துணியால் துடைத்தால், பளிச்சென்று மாறும்.
எலுமிச்சை + உப்பு :
எலுமிச்சையை இரண்டாக அறுத்து அதன் மீது உப்பை தூவிவிட்டு, அதை நேரடியாக துரு படிந்த பகுதிகளில் தேய்க்க வேண்டும். எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் துருவை கரைத்து கேஸ் அடுப்பை பளிச்சென்று மாற்றும்.