கால்களில் ஏற்படும் சில மாற்றங்கள், உங்கள் இதயத்தின் செயல்திறனை பாதிக்கக் கூடிய அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
பெரும்பாலானவர்கள் இதயநோய் என்றாலே மார்பு வலி, சுவாசக் குறைபாடு போன்ற அறிகுறிகளை மட்டுமே நினைப்பார்கள். ஆனால் உண்மையில், இதயச் சுகாதாரம் குறைவடைந்தால், அதன் தாக்கம் கால்களிலும் தெரியும்.
கால்விரல்களில் கட்டிகள் : உங்கள் கால்விரல்கள் அல்லது கை விரல்களில் தோன்றும் சிறிய, வலி தரும் மென்மையான கட்டிகள் ‘ஒஸ்லர் நோட்ஸ்’ என அழைக்கப்படுகின்றன. இதை சாதாரண கட்டி என தவறாக மதிப்பீடு செய்யக் கூடாது. இது, எண்டோகார்டிடிஸ் எனப்படும் இதயத்தின் உள்ளே ஏற்படும் தொற்றின் ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கக்கூடும்.
இது ஒரு தீவிர நோயாகவே கருதப்படுவதால், இந்தக் கட்டிகள் சில நாட்களில் மறைந்துவிட்டாலும், அதன் பின்னணியில் இருக்கும் நோயை கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். சிகிச்சை இல்லாமல் விட்டுவிடும் பட்சத்தில், இது உயிருக்கு ஆபத்தான நிலைக்கே சென்று முடிகிறது.
நிறம் மாறும் கால்விரல்கள் : கால்கள் அல்லது விரல்களில் நீல நிறம் தென்படுவதை பொதுவாக குளிர் காரணமாக கருதுவது வழக்கமானது. ஆனால், அது தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில், அது உடல் உறுப்புகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போனதைக் குறிக்கலாம். இதயம் சரியாக செயல்படாமல் போனால், ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் கால்கள் போன்ற பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் தடைபடுகிறது. இது செர்க்யுலேஷன் பிரச்சனை எனப்படும் ஒரு முக்கிய எச்சரிக்கையாகும். நீல நிறம் தொடர்ந்தும் காணப்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
கால்களில் வீக்கம் : நீங்கள் ஓய்வின்றி நிற்பதாலோ, அதிக நேரம் அமர்ந்திருப்பதாலோ கால்களில் வீக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இந்த வீக்கம் தொடர்ந்து நீடித்தால், அதற்குப் பின்னால் இதய செயலிழப்பு அல்லது இரத்த ஓட்டக் குறைபாடு போன்ற சிக்கல்கள் இருக்கக்கூடும். இதயம் சரியாக ரத்தத்தை பம்ப் செய்ய முடியாதபோது, உடலிலேயே திரவம் தேக்கமடைய ஆரம்பிக்கிறது. ஈர்ப்பு விசையின் காரணமாக, இந்த நீர்த்தேக்கம் முதலில் கால்கள் மற்றும் கணுக்கால்களில் அதிகம் தெரிகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் அதிகமாகும் இந்த வீக்கம், மாரடைப்பு அல்லது இதயக்குறைபாட்டின் ஆரம்பக் குறியீடாகக் கருதப்படுகிறது.
இதய நோய்கள் இன்று அனைவருக்கும் ஆபத்தானதாகிவிட்ட சூழ்நிலையில், உடலில் ஏற்படும் எந்தவொரு மாற்றத்தையும் தவிர்க்காமல், அதனை மருத்துவ பரிசோதனையுடன் இணைத்து பார்க்க வேண்டிய அவசியம் தற்போது அதிகமாகவே உள்ளது. நம் கால்களில் காணும் அறிகுறிகள், காலையில் காணும் கனவுகளைவிட முக்கியமானவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Read More : திடீர் திருப்பம்..!! பேராசிரியை கொடுத்த புகார்..!! இறந்துபோன அஜித்குமார் மீது சிபிஐ வழக்குப்பதிவு..!!