தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான இறுதி வாய்ப்பை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆய்வுப் பணிகளுக்குப் பிறகு (SIR), மாநிலம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், சுமார் 97 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 66 லட்சம் பேர் முகவரி மாறிச் சென்றவர்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நீக்கப்பட்டவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் மீண்டும் தங்களைப் பதிவு செய்துகொள்ள ஜனவரி 18-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் 4 நாட்கள் சிறப்பு முகாம்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் முதற்கட்ட முகாம்கள் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.
இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் இன்றும் (ஜனவரி 3), நாளையும் (ஜனவரி 4) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற உள்ளன. வரைவுப் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டுள்ளவர்கள் அல்லது புதிய வாக்காளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, உரிய ஆவணங்களுடன் தங்களது பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை அணுகுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.



