உள்நோக்கம் இன்றி ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுப்பது என்பது குற்றமாகாது என உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், 2015ஆம் ஆண்டில், நெடுங்குளம் பகுதியில் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட, திருமணமாகாத பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2018ல் முருகேசனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, முருகேசன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என். மஞ்சுளா வழங்கிய உத்தரவில், “ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுப்பது அவரின் கண்ணியத்தை பாதிக்கும் செயல் என்றாலும், அது உள்நோக்கமின்றி செய்யப்பட்டிருந்தால், குற்றமாக கருத முடியாது” என கூறினார்.
இந்த வழக்கில், அந்த பெண்ணை அவமதிக்க விரும்பும் நோக்கம் முருகேசனிடம் இருந்தது என்பதை நிரூபிக்கக்கூடிய எந்தவொரு நேரடி ஆதாரமும் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணே சாட்சியாக அழைக்கப்படவில்லை. நேரில் இருந்த சாட்சிகள் அளித்த தகவல்களில் முரண்பாடுகள் இருப்பதாக குறிப்பிட்டார். இதனால், மனுதாரருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
Read More : வீட்டில் எல்லோரும் ஒரே சோப்பு போட்டு குளிக்கிறீங்களா..? அதிர்ச்சி தரும் உண்மை..!! இனி தொடவே தொடாதீங்க..!!