ஏமனில் புதன்கிழமை இஸ்ரேல் மற்றொரு சுற்று கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று ஹவுதி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல், ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் ஒரு விமான நிலையத்தை ட்ரோன் மூலம் தாக்கிய சில நாட்கள் கழித்தே நடந்துள்ளது.
மேற்காசிய நாடான ஏமன், ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்குகிறது. ஹவுதி படையினர் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து, அந்நாட்டின் மீது 2023 முதல் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இஸ்ரேல் மீது ஹவுதி படையினர் கொத்து கொத்தாக குண்டுகளை வீசினர். இதை இஸ்ரேல் இடைமறித்து அழித்தது. இதற்கு பதிலடியாக, ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அதிபர் மாளிகை, கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், மின் நிலையங்கள் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தியது.
இந்தநிலையில், மீண்டும் தலைநகர் சனாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 35 பேர் பலியாகினர். 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஹவுத்திகளால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் தேடுதல் குழுக்கள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஹவுத்தி கட்டுப்பாட்டில் உள்ள செயற்கைக்கோள் செய்தி சேனலான அல்-மசிரா, ஏமன் மீதான தாக்குதல்களில் ஒன்று மத்திய சனாவில் உள்ள இராணுவ தலைமையக கட்டிடத்தைத் தாக்கியதாகக் கூறியது. அண்டை வீடுகளும் சேதமடைந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.