அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு முழுவதும் போர் தீவிரமடைந்துள்ளது. சமீப ஆண்டுகளில் இதுவே மிகக் கடுமையான மோதலாக கருதப்படுகிறது. அமெரிக்கா–இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையே நேரடி மோதல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா ஈரானின் அரசாங்க மற்றும் ராணுவ இலக்குகளை தாக்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், இந்த மோதல் ஒரு பிராந்தியப் போராக மாறி உள்ளது..
சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போரில் ஈரானில் இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.. இதுவரை 176 குழந்தைகள் உட்பட 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 900-க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குறைந்தது 85 பேர் உயிரிழந்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது; மேலும் நூற்றுக்கணக்கான மரணங்கள் தொடர்பான தகவல்களை அது சரிபார்த்து வருகிறது.
இதனிடையே, ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்சாதே கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, புதிய பாதுகாப்பு அமைச்சர் சையத் மஜித் எப் அல்-ரேசா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், புதிய அமைச்சரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது..
சனிக்கிழமை நடந்த தாக்குதல்களில் நசீர்சாதே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் இருவரும் கொல்லப்பட்ட நிலையில் தற்போது ஈரானின் புதிய அமைச்சரும் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் கொலை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையை தொடங்கியதன் பின்னணியில், ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல்கள், கடந்த பல தசாப்தங்களில் நடந்த மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றாகக் கூறப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள இராணுவ மற்றும் முக்கியமான மூலோபாய இடங்கள் குறிவைக்கப்பட்டன. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி அலுவலகங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளும் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காமெனியின் மரணம் ஈரான் அரசு ஊடகங்களாலும், வெளிநாட்டு ஊடகங்களாலும் உறுதி செய்யப்பட்டது..
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ (Operation Epic Fury) என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களால் உருவாகும் உடனடி அச்சுறுத்தல்களை தடுக்கவே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
தாக்குதல் ஏன் நடந்தது?
அமெரிக்காவின் சிறப்பு தூதர் Steve Witkoff உள்ளிட்ட அதிகாரிகள் கூறுகையில், ஈரானுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்குக் காரணம், அணு எரிபொருள் செறிவூட்டுவது தங்களின் “மாற்ற முடியாத உரிமை” என்று ஈரான் வலியுறுத்தியதே என தெரிவித்தனர். ஈரான் சுமார் 60% செறிவூட்டப்பட்ட 460 கிலோ கிராம் யூரேனியத்தை வைத்திருப்பதாகவும், அதனை பயன்படுத்தி சுமார் 11 அணு குண்டுகள் உருவாக்க முடியும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்…
இதற்கு பதிலாக, தங்களின் அணு நடவடிக்கைகள் முழுவதும் அமைதியானவை என ஈரான் மறுத்து, சர்வதேச கவலைகளை ஏற்கவில்லை.
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் இஸ்ரேல் மீது, வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது, மேலும் பொதுமக்கள் பகுதிகளிலும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இதனால், முழு மத்திய கிழக்கு பகுதியில் பெரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
இந்த மோதல் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தையும் பாதித்துள்ளது. தினமும் சுமார் 2 கோடி பீப்பாய் எண்ணெய் கடந்து செல்லும் முக்கிய வழியான ஹார்முஸ் நீரிணையில் ஈரான் எடுத்த நடவடிக்கைகள், உலகம் முழுவதும் எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார அதிர்வுகளை ஏற்படுத்தும் என்ற கவலையை அதிகரித்துள்ளது..



