1992 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூ.1 நாணயம், நாட்டின் நாணய அமைப்பில் இன்றும் முக்கிய பங்காற்றுகிறது. தினசரி பரிவர்த்தனைகளில் அதிகம் பயன்படும் இந்த நாணயம், பொதுமக்களின் மனதில் நிலையான மதிப்பைக் கொண்டது. ஆனால் பொருளாதார நிபுணர்கள் வெளியிட்ட தகவலின்படி, ரூ.1 நாணயத்தை தயாரிக்க அரசு செலவிடும் தொகை, அதன் உண்மையான மதிப்பை விட அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இது நிதி துறையில் நீண்டநாளாக பேசப்பட்டு வரும் ஒரு சுவாரஸ்யமான சவாலாகும்.
2018 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் கிடைத்த தகவலின்படி ஒரு ரூபாய் நாணயத்தை தயாரிக்கும் செலவு ரூ.1.11. இதனால் அரசு ரூ.1 மதிப்புள்ள நாணயத்துக்கு ரூ.1.11 செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிபுணர்கள், பணவீக்கம் மற்றும் உலோக உற்பத்திச் செலவு உயர்வு காரணமாக வரும் காலங்களில் இந்த செலவு இன்னும் அதிகரித்திருக்கும் என கருதுகின்றனர்.
ரூ.1 நாணயம் துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel) மூலம் தயாரிக்கப்படுகிறது. இதன் விட்டம் 21.93 மி.மீ, தடிமன் 1.45 மி.மீ, மற்றும் எடை 3.76 கிராம் ஆகும். இந்த நாணயத்தை உருவாக்க சிறப்பு அலாய் கலவை மற்றும் தனித்த உற்பத்தி நுட்பம் தேவைப்படுவதால், செலவு அதிகரிக்கிறது.
RTI தகவலின்படி பிற நாணயங்களின் உற்பத்திச் செலவுகள் ரூ.2 நாணயத்தின் உற்பத்திச் செலவு ரூ.1.28, ரூ.5 நாணயத்தின் செலவு ரூ.3.69, மற்றும் ரூ.10 நாணயத்தின் செலவு ரூ.5.54 ஆகும். அதேபோல் 1,000 பத்து ரூபாய் நோட்டுகளை அச்சிட சுமார் ரூ.960-ம், 1,000 இருபது ரூபாய் நோட்டுகளை அச்சிட ரூ.1,770-ம், 1,000 ஐநூறு ரூபாய் நோட்டுகளை அச்சிட சுமார் ரூ.2,290-ம் செலவாகிறது. ஒரு ரூபாய் நாணயத்தைத் தவிர மற்ற அனைத்து நாணயங்களும் அவற்றின் உண்மையான மதிப்பை விட குறைந்த செலவில் தயாரிக்கப்படுகின்றன.
Read more: 9 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பலி.. ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்..!



