ஐடி ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனனிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் மதுபான பாரில் ஒன்றாக மது அருந்தும்போது, ஐடி ஊழியருக்கும் நடிகை லட்சுமி மேனன் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து, அந்த ஐடி ஊழியரை லட்சுமி மேனன் தரப்பு காரில் கடத்திச் சென்று கடுமையாக தாக்கியுள்ளது. இதுதொடர்பாக போலீசிலும் புகாரளிக்கப்பட்டது.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஐடி ஊழியரை கடத்திய கும்பலைச் சேர்ந்த மிதுன், அனீஷ் மற்றும் சோனா மோல் ஆகியோரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்நிலையில், நடிகை லட்சுமி மேனனிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர். இதனை அறிந்த லட்சுமி மேனன் தற்போது தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு வினயன் இயக்கிய ‘ரகுவிண்டெ சுவந்தம் ரசியா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை லட்சுமி மேனன். அதன் பிறகு கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், றெக்க உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது அவர் தலைமறைவாக இருக்கும் தகவல், அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.