அமெரிக்காவில் அடுத்த 12 மாதங்களுக்குள் பொருளாதார மந்தநிலை (Recession) ஏற்படுவதற்கான வாய்ப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் 35% ஆக இருந்த நிலையில், தற்போது 30% ஆகக் குறைந்துள்ளதாக குளோபல் ரேட்டிங்ஸின் தலைமைப் பொருளாதார நிபுணர் சத்யம் பாண்டே தெரிவித்துள்ளார். இருப்பினும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி வைத்த வர்த்தகப் போரின் தாக்கத்தால் உலகப் பங்குச்சந்தைகள் ஏற்கனவே சரியத் தொடங்கியுள்ளன.
ஜேபி மோர்கன் (J.P. Morgan) போன்ற நிதி நிறுவனங்கள், அமெரிக்க நடவடிக்கைகளால் இந்த வருடமே பொருளாதார மந்தநிலை தொடங்கும் என்று கணித்துள்ளன. பரஸ்பர வரிவிதிப்பு காரணமாக அமெரிக்கப் பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருவதுடன், டவ் ஜோன்ஸ் (Dow Jones) குறியீட்டில் ஏற்பட்ட 2000 புள்ளிகள் சரிவு, முதலீட்டாளர்களுக்குப் பல லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க மார்க்கெட்டில் தினம் தினம் சரிவு ஏற்பட்டு வருவது உலகப் பொருளாதாரம் அழியப் போகிறதோ என்ற அச்சத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டாப் நிறுவனங்கள் உள்ள S&P 500 பங்குகள் 10% சரிந்தது ‘மார்க்கெட் கரெக்ஷன்’ (Market Correction) என்று அழைக்கப்பட்டாலும், இந்த நிலை நீடித்தால் ‘பியர் மார்க்கெட்’ (Bear Market – 20% சரிவு) ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து ‘மார்க்கெட் க்ராஷ்’, மந்தநிலை (Recession), மற்றும் பெரும் மந்தநிலை (Depression) போன்ற சரிவுகள் ஏற்படலாம் என்ற அபாயம் உள்ளது.
அமெரிக்கச் சந்தை வீழ்ந்தால் இந்திய மற்றும் உலகச் சந்தைகளும் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த நிலையில், புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ‘ரிச் டாட் புவர் டாட்’ (Rich Dad Poor Dad) புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அவர், “சர்வதேச மார்க்கெட் மிக மோசமாக உள்ளது; கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மிகக் கொடூரமான பங்குச்சந்தை வீழ்ச்சி 2025 இல் நடக்கப் போகிறது” என்று கணித்துள்ளார். 1929இல் நடந்த ‘கிரேட் டிப்ரெஷன்’ போன்றதொரு சம்பவம் இப்போது நடக்கப்போவதாகவும், உண்மையான பணமான தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தப் பொருளாதாரச் சரிவு ஐடி துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, டிசிஎஸ், ஆக்சென்ச்சர், மைக்ரோசாஃப்ட், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் கூகிள் போன்ற நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் நோக்கிலும், திறன் மேம்பாட்டிற்காகவும் மறுசீரமைப்புகளை மேற்கொண்டுள்ளன.
இதன் காரணமாகப் பல ஆயிரம் ஊழியர்களை அந்நிறுவனங்கள் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளன. உதாரணமாக, இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ், 2025-26 நிதியாண்டில் உலகளாவிய ஊழியர்களில் சுமார் 2% பேர், அதாவது சுமார் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான தேவையின் அதிகரிப்பால் இந்த மறுசீரமைப்பு நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், கூகுள் நிறுவனம் அதன் ஏஐ (AI) அமைப்பை விரைவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, வடிவமைப்பு தொடர்பான பணிகளில் இருந்த 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிசிஎஸ்-இன் பணி விலகல் விகிதமும் முந்தைய காலாண்டை விடச் சற்று அதிகரித்துள்ளதால், ஐடி துறையில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது.



