தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். மதுரையில் நடந்த 2-வது மாநாடு வெற்றிகரமாக முடிந்த நிலையில், மக்களை சந்திக்க தயாராகி வருகிறார். செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்க இருக்கும் விஜய், இதற்கான அனுமதியை பெறுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி திருச்சிக்கு வந்தார். அப்போது, அவரை வரவேற்க ஏராளமான தவெக தொண்டர்கள் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்திருந்தனர்.
விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் புஸ்ஸி ஆனந்த் சாமி தரிசனம் செய்தபோது, தொண்டர்களின் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்தன. இது குறித்து அறிந்த போலீசார், வாகனங்களை அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்தினர். இதனால், தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியது, போலீசாரின் பணியைத் தடுத்தது, சட்டவிரோதமாக கூடியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் புஸ்ஸி ஆனந்த் உட்பட 8 பேர் மீது திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.