பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்த 3 நாள் விவாதம் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தொடங்கியது. பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவுப் படைகளுக்கு வழங்கப்பட்ட தீர்க்கமான நடவடிக்கை, தக்க பதிலடிக்காக மோடி அரசாங்கத்தை பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பாராட்டின, மேலும் இந்திய ஆயுதப் படைகளின் திறன்கள் குறித்து சந்தேகம் எழுப்பிய எதிர்க்கட்சிகளை பாஜக அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தனர்..
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்துப் பேசினார்.. அப்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக நின்றதாக அவர் கூறினார்.
மேலும் “ ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கிய தருணம், உண்மையில் அது தொடங்குவதற்கு முன்பே, எதிர்க்கட்சிகள், அனைத்து கட்சிகளும், ஆயுதப்படைகளுடனும், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கத்துடனும் ஒரு பாறை போல நிற்போம் என்று உறுதியளித்தன. பாஜகவின் சில தலைவர்களிடமிருந்து விசித்திரமான கிண்டல் கருத்துக்களைக் கேட்டோம். ஆனால் நாங்கள் எதுவும் சொல்லவில்லை. இது இந்தியா கூட்டணியின் அனைத்து மூத்த தலைமைகளுக்கும் இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று. ஒரு எதிர்க்கட்சியாக, நாங்கள் ஒற்றுமையாக இருந்ததில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்” என்று தெரிவித்தார்..
ட்ரம்பின் போர் நிறுத்தக் கோரிக்கை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசாங்கத்தை விமர்சித்து , பிரதமர் நரேந்திர மோடியை “டொனால்ட் டிரம்ப் ஒரு பொய்யர்” என்று கூறத் துணிந்தார். நீங்கள் பாகிஸ்தானுக்குள் சென்றீர்கள், எங்கள் விமானிகளுக்கு அவர்களின் வான் பாதுகாப்பைத் தாக்க வேண்டாம் என்று சொன்னீர்கள். இந்த நடவடிக்கையில் இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை தான்.. எங்கள் விமானிகளின் கைகளைக் கட்டினீர்கள்..
இரண்டு வார்த்தைகள் உள்ளன – ‘அரசியல் விருப்பம்’ மற்றும் ‘செயல்பாட்டு சுதந்திரம்’. நீங்கள் இந்திய ஆயுதப் படைகளைப் பயன்படுத்த விரும்பினால், உங்களிடம் 100% அரசியல் விருப்பமும் முழு செயல்பாட்டு சுதந்திரமும் இருக்க வேண்டும். நேற்று, ராஜ்நாத் சிங் 1971 மற்றும் சிந்தூரை ஒப்பிட்டார். 1971 இல் அரசியல் விருப்பம் இருந்தது என்பதை நான் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஏழாவது கடற்படை இந்தியப் பெருங்கடல் வழியாக இந்தியாவை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போதைய பிரதமர் பங்களாதேஷுக்கு நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வாருங்கள் என்று கூறினார்… இந்திரா காந்தி ஜெனரல் மானெக்ஷாவிடம் 6 மாதங்கள், 1 வருடம், உங்களுக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் உங்களுக்கு நடவடிக்கை சுதந்திரம், சூழ்ச்சி இருக்க வேண்டும் என்று கூறினார். 1 லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தனர், புதிய நாடு உருவாக்கப்பட்டது,” என்று ராகுல் காந்தி கூறினார்.
பஹல்காம் தாக்குதலின் போது பயங்கரவாதத்தை நாடுகள் கண்டித்த போதிலும், ஒரு நாடு கூட பாகிஸ்தான் என்று பெயரை சொல்லவில்லை.. பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை மதிய உணவிற்கு அழைத்ததன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ‘அனைத்து நெறிமுறைகளையும் மீறிவிட்டார். பஹல்காமின் பின்னணியில் இருப்பவர் ட்ரம்புடன் மதிய உணவு சாப்பிடும் முனீர் ஆவார். அவர் அங்கே அமர்ந்திருக்கிறார், நமது பிரதமர் அங்கு செல்வதில்லை..
இந்தியாவிற்கு மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கை சவால் பாகிஸ்தானையும் சீனாவையும் தனித்தனியாக வைத்திருப்பது தான்.. ஆனால் இந்த மோதலில், பாகிஸ்தானும் சீனாவும் ஒன்றாக இணைந்துள்ளன.. சீனர்கள் அவர்களுக்கு முக்கியமான போர்க்களத் தகவல்களை வழங்கினார்கள்.
அரசாங்கம் எனது பேச்சைக் கேட்டிருந்தால், ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியா 5 விமானங்களை இழந்திருக்காது. பாகிஸ்தான் படைகள் சீனாவிடமிருந்து முக்கியமான தரவுகளைப் பெறுகின்றன. பிரதமர் தனது பிம்பத்தைப் பாதுகாக்க ஆயுதப்படைகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது. நாட்டின் தேசிய நலன்களைப் பாதுகாக்க மட்டுமே படைகளைப் பயன்படுத்த வேண்டும்..” என்று கூறினார்.
ராகுல் காந்தி பிரதமர் மோடியிடம், நாடும் ராணுவமும் தனது பிம்பம் மற்றும் மக்கள் தொடர்புக்கு அப்பாற்பட்டது என்றும், “அதைப் புரிந்துகொள்ளும் கண்ணியம் வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்தார். “உங்கள் சொந்த அற்ப அரசியல் விளையாட்டுகளுக்காக ஆயுதப்படைகளையும் தேசிய நலன்களையும் தியாகம் செய்யாதீர்கள்” என்று அவர் கூறினார்.