நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தனியார் தேயிலை எஸ்டேட் ஒன்றில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கணவன் ஜெகதீஸ் குர்ரே – மனைவி சிமாதேவியை (35) ஆகியோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த எஸ்டேட் குடியிருப்பில் இருவருமே கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிமாதேவியைக் காணவில்லை என்று அவரது கணவர் ஜெகதீஸ் குர்ரே கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தேடுதல் வேட்டையில் இருந்த நிலையில், நேற்று முன்தினம் எஸ்டேட் குடியிருப்புக்கு அருகில் காயங்களுடன் சிமாதேவி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையிலான குழுவினர் உடலை கைப்பற்றி கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில், சிமாதேவி கழுத்து துணியால் இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில், ஜெகதீஸ் குர்ரேவுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதும், அவரது மனைவி சிமாதேவி எப்போதும் செல்போனில் இன்ஸ்டாகிராம் செயலியை பார்த்துக்கொண்டே இருந்ததும் தெரியவந்தது. இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஜெகதீஸ் குர்ரே தன் மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனால், அவர் கேட்காததால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஸ் குர்ரே, சிமாதேவி அணிந்திருந்த துப்பட்டாவைப் பயன்படுத்தி அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.
பின்னர், சடலத்தை வீட்டுக்குப் பின்புறம் வீசி, அதன் மீது துப்பட்டாவால் மூடி வைத்துவிட்டு, எதுவும் நடக்காதது போல வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். மனைவி காணாமல் போனதாக நாடகமாடி புகார் கொடுத்த ஜெகதீஸ் குர்ரேவை, போலீசார் தற்போது கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.