கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நெரிசல் ஏற்பட்டபோது விஜய் சம்பவ இடத்தில் இல்லாமல் சென்னை திரும்பியது குறித்து அவர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இந்தத் துயரச் சம்பவம் நடந்து ஒரு மாதமாகும் நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி தங்கள் உறவுகளை இழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாமல்லபுரத்தில் வைத்து ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாகச் சந்தித்து ஆறுதல் கூற அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
இருப்பினும், இந்தச் சந்திப்பு தற்போது மீண்டும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. ‘உறவுகளை இழந்த குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்க முடியாதவர், எப்படி ஓட்டு கேட்டு வெளியே வந்து மக்களைச் சந்திப்பார்?’ என்றும், ‘பனையூர் பண்ணையார், இறங்கி வரவேமாட்டார்’ என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். சீமான் பேசுகையில், “செத்துப்போன குடும்பத்தினர் அனைவரையும் பனையூருக்கு வா என்று சொல்கிறார். அப்படி என்றால் தேர்தல் நேரத்தில் அனைத்து ஓட்டுப் பெட்டிகளையும் பனையூரில் வை என்று சொல்வாரா? என்னங்க இது… பண்ணையார் கூட பஞ்சாயத்துக்கு வருவார், ஆனால் பனையூர் பஞ்சாயத்து என் வீட்டில் தான் என்று ஆலமரத்துக்கு வரமாட்டேன் என்கிறார். வீட்டில் தான் பஞ்சாயத்து… நாட்டாமையைத் தாண்டிய நாட்டாமையாக இருக்கிறது” என்று சரமாரியாகத் தாக்கிப் பேசினார்.
Read More : தலைமை மீது அதிருப்தி..? திமுகவில் சாரை சாரையாக இணைந்த அதிமுக நிர்வாகிகள்..!! அதிர்ச்சியில் இபிஎஸ்..!!



