எக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி, புதிய தொழில்நுட்ப முயற்சியில் கால் பதித்துள்ளார். இணைய வசதி இல்லாமலேயே செயல்படக்கூடிய புதிய மெசேஜிங் செயலியான ‘பிட்சாட்’ (Bitchat)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலி, Bluetooth தொழில்நுட்பத்தின் மூலமாக செயல்படுகிறது. இதன் மூலம், இணைய இணைப்பு இல்லாத இடங்களிலும், பயனர்கள் ஒருவருடன் ஒருவர் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடிகிறது.
பெரும்பாலான மெசேஜிங் செயலிகள் இணையத்தை தழுவி இயங்குகின்றன. ஆனால் பிட்சாட் செயலியின் பெரும் சிறப்பு என்னவென்றால், இது இணையமில்லாத சூழ்நிலைகளிலும் தன்னிச்சையாக ப்ளூடூத் வழியாக தகவல் பரிமாற்றத்தை செயல்படுத்துகிறது. குறிப்பாக, பேரிடர் காலங்கள், தொலைதூர கிராமப்புறங்கள்,
இணைய இணைப்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் இது பெரும் பயனளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜாக் டோர்சி கூறுகையில், “பிட்சாட் செயலி தற்போது மறுபரிசீலனை (beta testing) நிலையில் உள்ளது. விரைவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (Apple App Store) இந்த செயலியைப் பெற முடியும்,” என தெரிவித்துள்ளார். பாதுகாப்பு, தனியுரிமை ஆகிய அம்சங்களில் சிறந்த துல்லியத்தையும் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த புதிய செயலி, தகவல்தொடர்பு உலகில் புதிய அத்தியாயத்தைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையச் சார்பற்ற மற்றும் தனியுரிமையை மையமாகக் கொண்ட இந்த செயலி, எதிர்காலத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Read more: தனியார் பேருந்தில் குரூப்-4 வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டதால் சர்ச்சை..!!