ஊழியர்களின் ‘வேலை-வாழ்க்கை சமநிலை’ (Work-Life Balance) என்ற கருத்தைப் பின்பற்றி, ஜப்பான், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற பல நாடுகளில் தற்போது வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை மற்றும் 3 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதே ஃபார்முலாவை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அம்சம் சமீபத்தில் அமலுக்குக் கொண்டு வரப்பட்ட புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளதாக மத்திய தொழிலாளர் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், நம் நாட்டில் விரைவில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறை அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவில் ஐ.டி. நிறுவனங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை நடைமுறையும், மற்ற தொழிற்சாலைகளில் 6 நாட்கள் வேலை நடைமுறையும் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், உலக நாடுகள் போல ஊழியர்களுக்கு அதிக ஓய்வை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நவம்பர் 21ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்த புதிய 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் (New Labour Code), இந்தச் சலுகைக்கான அம்சங்கள் உள்ளன.
தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்புச் சட்டம் 2020 ஆகிய நான்கு சட்டங்கள், ஏற்கெனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளன.
12 மணி நேர வேலைக்கு ஒப்புதல் :
இந்த சட்டத் தொகுப்புகளில் தான், வாரத்தில் 4 நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறைக்கான அம்சம் இடம்பெற்றுள்ளது. புதிய சட்டங்களின்படி, வாரம் 4 நாள் வேலை என்பது சாத்தியமே என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “புதிய தொழிலாளர் சட்டங்கள், வாரத்தில் 4 நாட்களுக்குத் தலா 12 மணிநேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கின்றன. மீதமுள்ள 3 நாட்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளது.
இந்தியாவில் வாராந்திர வேலை நேரம் 48 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஒரு நாளைக்கு 8 மணிநேரம் பணி செய்தால், 6 நாட்கள் வேலை தேவைப்படும். ஆனால், இந்த புதிய சட்டத்தின் மூலம், ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பணி செய்தால், 4 நாட்களிலேயே 48 மணிநேர வேலையை முடிக்க முடியும். இந்த 12 மணிநேர வேலை என்பது இடைவேளையும் உள்ளடக்கியது தான்.
மேலும், ஊழியர்கள் கூடுதலாக வேலை செய்தால் (ஓவர் டைம்), அதற்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கவும் புதிய தொழிலாளர் சட்டம் பரிந்துரைக்கிறது. எனவே, வரும் நாட்களில் இந்தியாவில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை என்ற புதிய நடைமுறை அமலுக்கு வர அதிக வாய்ப்புள்ளது.
Read More : தமிழக மக்களுக்கு ஜாக்பாட் செய்தி..!! பொங்கல் பரிசுத் தொகை ரூ.5,000..? வெளியான அதிரடி அறிவிப்பு..!!



