இந்திய ரயில்வே துறையில் இருந்து ஒரு மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 22,000-க்கும் மேற்பட்ட ‘லெவல்-1’ (Level-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
ரயில்வே தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்பின்படி, பாயிண்ட்ஸ்மேன் (Pointsman), உதவியாளர் (Assistant) மற்றும் டிராக் மெயின்டெய்னர் (Track Maintainer) உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பம் சாரா பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ (ITI) முடித்தவர்களும், தேசிய அப்ரண்டிஸ் சான்றிதழ் (NAC) பெற்றவர்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பை பொறுத்தவரை, 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிகளின்படி எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, அடிப்படை ஊதியமாக ரூ.18,000 மற்றும் இதர படிகள் சேர்த்துச் சிறப்பான சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு முறையானது 4 நிலைகளைக் கொண்டது. முதலில் கணினி வழித் தேர்வு (CBT) நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு (PET), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் இறுதி மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுப் பணி நியமனம் வழங்கப்படும். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500-ம், எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 2026, ஜனவரி 21-ம் தேதி முதல் பிப்ரவரி 20-ம் தேதி வரை ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbapply.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



