உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்க விரும்பும் தமிழக சிறுபான்மையின மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு சிறப்புமிக்க கல்வி உதவித்தொகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மாணவர்களுக்கு அவர்களின் முதுகலைப் பட்டப்படிப்பிற்காக தலா ரூ.30 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
2025-2026ஆம் கல்வியாண்டிற்கான இந்த அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ளார். இஸ்லாமிய சிறுபான்மையின மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதையும், அவர்களுக்கு உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்குவதையும் இத்திட்டம் முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது.
மொத்தம் 10 இஸ்லாமிய சிறுபான்மையின மாணவர்கள் பயனடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.3.60 கோடியை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற மாணவர்கள் சில தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது, மாணவர்கள் சேரும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனம் உலகப் புகழ்பெற்ற QS தரவரிசைப் பட்டியலில் முதல் 250 இடங்களுக்குள் இருக்க வேண்டும். மேலும், முதுகலைப் பட்டப்படிப்பிற்கான நிபந்தனையற்ற சேர்க்கைக் கடிதத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இளங்கலைப் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி சதவீதத்தைப் பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மேலாண்மை, மருத்துவம், சட்டம், பொருளாதாரம், சமூக அறிவியல் உள்ளிட்ட 11 முக்கியப் பாடப்பிரிவுகளில் முதுகலைப் படிப்பைத் தொடரும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி..?
www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேவையான அனைத்து ஆவணங்களுடன் இணைத்து, ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600 005 என்ற முகவரிக்கு அக்டோபர் 31, 2025 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.



