தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,545 மற்றும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,500 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். இதில், தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையாக சன்னரகத்திற்கு ரூ.156 மற்றும் பொதுரகத்திற்கு ரூ.131 வழங்கப்படும்.
திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளிடம் இருந்து குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,500-க்கு நெல் கொள்முதல் செய்வோம் என உறுதி அளித்திருந்தோம். அந்த வாக்குறுதி இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
2024–25 பருவத்தில் இதுவரை 47.97 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 51 மாத காலத்தில் மொத்தம் 1.85 கோடி டன் நெல் வாங்கப்பட்டு, ரூ.44,777.83 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதில், ஊக்கத்தொகை மட்டும் ரூ.2,031.29 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2022–23 ஆம் ஆண்டில் தொடங்கியபடி, இந்த ஆண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதலே கொள்முதல் நடைமுறை தொடங்கும். ரூ.333.07 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 26 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள், 4.03 லட்சம் டன் கொள்ளளவு கொண்டதாக, தற்போது பயன்பாட்டில் இருப்பதாகவும் கூறினார்.
இந்தாண்டு நெல் உற்பத்தி மிகுந்த அளவில் இருந்தபோதும், இடையிடையே பெய்த மழையால் பாதிப்பு ஏற்படாமல், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் 2025–26 பருவத்திற்கான கொள்முதல் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் துவங்கும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், நெல் கொள்முதல் மையங்களில் சேகரிக்கப்பட்ட நெல்லை நேரடியாக அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பும் திட்டம் சோதனை அடிப்படையில் நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே, புதிய விலையில் விவசாயிகள் அதிகளவில் பயன் பெறுமாறு அமைச்சர் சக்கரபாணி கேட்டுக்கொண்டார்.
Read More : நடைபயிற்சி செய்தால் உண்மையில் கொழுப்பு குறையுமா..? தினமும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்..?