மத்திய அரசின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட ஆலோசனைகள் தலைநகரில் இப்போதே சூடுபிடித்துள்ளன. வருமான வரிச் சலுகைகள், ஜிஎஸ்டி மாற்றங்கள் எனப் பல்வேறு எதிர்பார்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளின் பார்வை முழுவதும் ‘பிஎம் கிசான்’ (PM-Kisan) திட்டத்தின் மீதே உள்ளது. குறிப்பாக, விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டு ஊக்கத்தொகையை மத்திய அரசு இந்த முறை உயர்த்துமா என்பதே தற்போதைய பிரதான விவாதமாக மாறியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது 4 மாதங்களுக்கு ஒருமுறை 2,000 ரூபாய் என மூன்று தவணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இடுபொருட்களின் விலை உயர்வு மற்றும் விவசாயச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொகையைத் தவணைக்கு 4,000 ரூபாயாக, அதாவது ஆண்டுக்கு மொத்தம் 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனப் பல்வேறு விவசாய அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன. இந்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியானால், அது கோடிக்கணக்கான விவசாயிகளுக்குப் மிகப்பெரிய நிதியாதாரமாக அமையும்.
மத்திய அரசு இந்த உயர்வை அறிவிக்கும் பட்சத்தில், பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ள 22-ஆவது தவணையிலேயே அந்தப் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. வரவிருக்கும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்தத் தொகை விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இத்திட்டத்தின் பலனைத் தடையின்றிப் பெறுவதற்கு விவசாயிகள் சில அத்தியாவசியப் பணிகளை முடிக்க வேண்டியது கட்டாயமாகும். குறிப்பாக, e-KYC சரிபார்ப்பு, நில ஆவணங்களைச் சரிபார்த்தல் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்ற பணிகளைத் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் வெளியான 21-ஆவது தவணையின் போது, e-KYC முடிக்காத பல விவசாயிகளுக்குத் தொகை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுமார் 9 கோடி விவசாயிகளுக்குப் பின்னர் அந்தத் தொகை விடுவிக்கப்பட்டாலும், இம்முறை அத்தகைய குளறுபடிகளைத் தவிர்க்க முன்கூட்டியே தயாராக இருப்பது அவசியமாகும். 2026 சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இணையாக விவசாயிகளுக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. விவசாயிகளின் இந்த நீண்டகாலக் கோரிக்கைக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டுமா என்பது பட்ஜெட் நாளன்று தெரிந்துவிடும்.



