தமிழகத்தின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகையை மக்கள் மனநிறைவோடு கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் சேர்த்து வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பு 2025-ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை காரணமாக காட்டி அரசு ரொக்கப் பணத்தைத் தவிர்த்திருந்தது. அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது மக்களிடையே கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வரும் 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், எதிர்வரும் பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்களை கவரும் வகையில் மீண்டும் ரொக்கப் பணம் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடமும் பலமாக எழுந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், தேர்தல் கணக்குகளை கருத்தில் கொண்டு அரசு இதற்கான திட்டமிடலில் இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.
இதற்கிடையே, இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு விநியோக தேதியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக, ஜனவரி 9-ஆம் தேதி முதல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அதாவது ஜனவரி 7-ஆம் தேதி முதலே விநியோகத்தை தொடங்க அரசு ஆயத்தமாகி வருகிறது.
இதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகள் மூலமும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை அடங்கிய தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பண்டிகை கால நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் முன்கூட்டியே பொருட்களைப் பெற்றுச் செல்லவும் இந்தத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Read More : உங்கள் தலை விதியை மாற்றும் கோயில்..!! எங்கிருக்கு தெரியுமா..? ஒருமுறை சென்று வாங்க..!!



