தமிழக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில், மாநில அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நிதிப் பற்றாக்குறை காரணமாக ரொக்கப் பணம் தவிர்க்கப்பட்டு, பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது.
இந்தச் சூழலில், அடுத்த ஆண்டு வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, 2026 பொங்கல் பண்டிகையின்போது மீண்டும் ரொக்கப் பணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை ரொக்கப் பணம் வழங்கத் தமிழக அரசு ஆயத்தமாகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகையில், ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகையாகப் பணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறும், அதற்கான நிதி ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டும் என்றும் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திட்டத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பணப் பட்டுவாடா இல்லாததால் ஏற்பட்ட விமர்சனங்களைச் சமாளிக்கவும், வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ளவும், இந்த ஆண்டு ரொக்கப் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் திட்டம் செயல்படுத்தப்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Read More : மக்கள் தொகையை உயர்த்த சீனா எடுத்த வினோத முடிவு..!! ஆணுறை, கருத்தடை சாதனங்களுக்கான வரி 13% உயர்வு..!!



