ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் பதார் தஷோதி பகுதியில் இன்று திடீர் மேக வெடிப்பு ஏற்பட்டது.. இதனால் கனமழை கொட்டி தீர்த்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. மேலும் இந்த வெள்ளத்தில் ஒரு சமூக சமையலறை கொட்டகை அடித்துச் செல்லப்பட்டது… இதில் 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை..
ஜம்மு & காஷ்மீரின் பல பகுதிகளில் அடுத்த 4–6 மணி நேரத்தில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்றும், அதனுடன் சிறிது நேரம் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் ஸ்ரீநகர் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த நிலையில் துணை ஆணையர் பங்கஜ் குமார் சர்மாவுடன் தான் பேசியதாக மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ஜம்மு காஷ்மீர் மாநில எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ சுனில் குமார் சர்மாவிடமிருந்து அவசர செய்தி வந்த பிறகு, கிஷ்த்வார் துணை ஆணையர் பங்கஜ் குமார் சர்மாவிடம் இப்போதுதான் பேசினேன். சோசிட்டி பகுதியில் ஒரு பெரிய மேகவெடிப்பு ஏற்பட்டது, இதனால் கணிசமான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும். நிர்வாகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது; மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு புறப்பட்டுள்ளது. சேத மதிப்பீடு மற்றும் தேவையான மீட்பு மற்றும் மருத்துவ மேலாண்மை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன,” என்று தெரிவித்துள்ளார்.
மச்சைல் மாதா யாத்திரையின் தொடக்கப் புள்ளியான கிஷ்த்வாரில் உள்ள சஷோதி பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக துணை ஆணையர் கிஷ்த்வார் பங்கஜ் சர்மா தெரிவித்தார். மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
ஜம்மு & காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்ள்ளார்.. அவரின் எக்ஸ் பதிவில் “ கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பால் துயரமடைந்தேன். துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் சிவில், காவல்துறை, ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்..
குப்வாரா, பாரமுல்லா, பந்திபோரா, ஸ்ரீநகர், காண்டர்பால், புட்காமின் மலைப்பாங்கான பகுதிகள், அத்துடன் பூஞ்ச், ராஜோரி, ரியாசி, உதம்பூர், ஜம்மு, தோடா மற்றும் கிஷ்த்வார் ஆகிய பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது..
கனமழை தொடரும் எனவும் மேக வெடிப்பு சம்பவங்கள், திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள், மண்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.