ஜம்முவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. வைஷ்ணவ தேவி கோயிலுக்கு சென்ற யாத்ரீகர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய நதிகளான தாவி மற்றும் ராவியில் வெள்ளம், அபாய அளவுக்கு மேல் செல்கிறது. கதுவாவில் ராவி நதியை ஒட்டிய தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தோடா மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு இடிந்து விழுந்ததில் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரியாசி மாவட்டத்தில் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் அத்குவாரி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். இதனால் இக்கோயிலுக்கான யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அங்கு மீட்புப் பணி தீவிரம் அடைந்துள்ளது.
கிஷ்த்வாரில் காணாமல் போன டஜன் கணக்கான யாத்ரீகர்களின் உடல்களை மீட்க அதிகாரிகள் போராடி வருகின்றனர். கிஷ்த்வார் துயரத்தில் இறந்த மற்றும் காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் மச்சைல் மாதா சன்னதிக்கு வருகை தந்த யாத்ரீகர்கள் ஆவர். தோடா மாவட்டத்தில் இரண்டு தனித்தனி சம்பவங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் வீடு இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஜம்மு-ஸ்ரீநகர் மற்றும் கிஷ்த்வார்-தோடா தேசிய நெடுஞ்சாலைகளில் பல நிலச்சரிவுகள் முக்கிய சாலைகளைத் தடுத்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்முவின் மலைப்பாங்கான மாவட்டங்களில் வெள்ள நீர் பேரழிவை ஏற்படுத்தியது, பல சாலைகள் மூழ்கின அல்லது இடிந்து விழுந்தன.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக கத்ரா, உதம்பூர் மற்றும் ஜம்முவை இணைக்கும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தின் பல பகுதிகளில் கனமழையால் பல இடங்களில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் சேதமடைந்ததால், நெட்வொர்க் துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்முவில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் இரண்டும் பாதிக்கப்பட்டன