மகாராஷ்டிராவின் ஜல்காவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.‘ஜாம்தாரா: சீசன் 2’ தொடரில் நடித்த நடிகர் சச்சின் சந்த்வேட் (வயது 25) தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் நடிகரின் திடீர் மரணம், திரை உலகத்தையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சச்சினை அவரது குடும்பத்தினர் வீட்டில் மாடிப் பங்கில் தூக்கிட்டு கிடந்த நிலையில் கண்டுபிடித்துள்ளனர். உடனே அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவரது உடல் நிலை மோசமடைந்ததால் துலே மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, அக்டோபர் 24-ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் சச்சின் உயிரிழந்தார். தற்கொலைக்கான சரியான காரணம் இதுவரை வெளிவரவில்லை.
சச்சின் சமீபத்தில் தான் தனது புதிய திரைப்படமான ‘அசுர்வன்’ (Asurvan) குறித்து அறிவித்திருந்தார். இதில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் சச்சின் ராமச்சந்திர அம்பாட் இயக்கியுள்ள இந்த த்ரில்லர் படத்தில் பூஜா மொய்லி மற்றும் அனுஜ் தாக்கரே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் இவ்வாண்டின் பிற்பகுதியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. சச்சின் மரணத்தையடுத்து, பரோலா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜல்காவைச் சேர்ந்த சச்சின், நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியராகவும் பணியாற்றியுள்ளார். புனே ஐடி பார்கில் வேலை செய்தபோதும், தனது நீண்டகால கனவான நடிப்புத்துறையில் சாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து நடித்து வந்தார்.. ஆனால் இளம் வயதிலேயே அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. மரணத்திற்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
Read More : லோகேஷ் இல்லையாம்.. ரஜினி – கமல் இணையும் படத்தின் இயக்குனர் இவர் தானாம்..! ரசிகர்களுக்கு ட்ரீட் கன்ஃபார்ம்..!



