உலக அளவில் காலநிலை மாற்றங்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதேபோல், பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தான், ஜப்பானில் காய்ச்சல் மற்றும் சளி தொற்றுகள் தேசிய அளவில் ‘தொற்று அபாய எச்சரிக்கையை’ (Epidemic) அறிவிக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளன.
பொதுவாக, ஒரு நோய் குறிப்பிட்ட பகுதிக்குள் மிக அதிகமாகப் பரவும்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்படும். ஜப்பான் முழுவதும் பல நூறு பள்ளிகள், கிண்டர்கார்ட்டன்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், பணியிடங்களில் ஊழியர்கள் நேரில் வருவது கட்டாயப்படுத்தப்படவில்லை. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியுமாறு அந்நாட்டுச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஜப்பானிய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, கடந்த அக்டோபர் 10 நிலவரப்படி, 6,000-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுநோயின் தேசிய சராசரியானது நிர்ணயிக்கப்பட்ட அளவுகோலைத் தாண்டிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர்/டிசம்பர் காலகட்டத்தில் மட்டுமே நோய் பரவல் உச்சத்தை அடையும் ஜப்பானில், அக்டோபரிலேயே இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை விதைத்துள்ளது.
Health Sciences University of Hokkaido-வைச் சேர்ந்த யோகோ என்ற பேராசிரியர் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளில் இரண்டாவது முறையாகப் பருவகால பாதிப்புகள் இவ்வளவு முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் உலகளாவிய பருவநிலை மாற்றங்களைக் கருத்தில் கொள்ளும்போது இது எதிர்பாராதது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது பரவி வரும் இந்தத் தொற்றின் அறிகுறிகளும் பாதிப்புகளும் ஆரம்ப கட்ட கொரோனா தொற்றின் அறிகுறிகளை ஒத்திருப்பது உலக அளவில் கவலையை அதிகரித்துள்ளது.
பாதிப்பை குறைக்கும் வழிகள் :
முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் இந்த நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த தொற்றால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே உடல்நலக் கோளாறு உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், அத்தகையவர்கள் உரிய தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மற்றவர்களுக்கு இது லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தி, விரைவாகக் குணமடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதுவரை இந்த நோய்க்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்பது மருத்துவ மற்றும் அறிவியல் ஆய்வாளர்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது.
Read More : தீபாவளி பண்டிகை..!! ஆஃபர்களை அள்ளிக் கொடுத்த பிளிப்கார்ட்..!! பாதி விலையில் ஸ்மார்ட் ஃபோன்கள் விற்பனை..!!