ஆதிகால மனிதனை போல, நாமும் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் வாழ்க்கை முறையில் இருந்து விலகி, குறிப்பிட்ட நேர இடைவெளியில் உடலுக்கு அசைவு கொடுப்பது இன்றைய காலத்தில் அத்தியாவசியம். கார்டியோ, வலிமைப் பயிற்சிகள் எனப் பல வடிவங்களில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்றாலும், வாரத்தில் குறைந்தபட்சம் 4 முதல் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். இதில், மூட்டுக்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் அதிகப் பலன் தரக்கூடிய நடைபயிற்சி ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.
பிரபலமாகும் ‘6-6-6’ நடைபயிற்சி விதி :
நடைபயிற்சியின் மூலம் முழுமையான பலன்களைப் பெற விரும்புகிறவர்கள், தற்போது பரவலாகி வரும் ‘6-6-6’ நடைபயிற்சி விதியைப் பின்பற்றலாம். இந்த விதி நடைபயிற்சியை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பழக்கமாக மாற்ற உதவுகிறது.
முதல் 6 நிமிடம்: ஆரம்பத்தில் ஆறு நிமிடங்கள் மிதமான வேகத்தில் உடலை தயார்படுத்தும் வார்ம்-அப் (Warm-up) பயிற்சிகள்.
60 நிமிடம்: அடுத்து ஒரு மணி நேரம் (60 நிமிடம்) விறுவிறுப்பான நடை (Brisk Walk) மேற்கொள்ளுதல்.
கடைசி 6 நிமிடம்: இறுதியாக, ஆறு நிமிடங்கள் நிதானமான கூல்-டவுன் (Cool-down) பயிற்சிகளுடன் முடிப்பது.
இந்த ‘6-6-6’ விதியை சிலர், வாரத்தில் 6 நாட்கள், காலை 6 மணி அல்லது மாலை 6 மணிக்கு செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இது ஜப்பானிய உடற்பயிற்சி கலாச்சாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
உடல் எடை குறைப்பு மற்றும் ஆரோக்கிய பலன்கள் :
டெகாத்லான் உடற்பயிற்சி நிபுணர்களின் கூற்றுப்படி, மணிக்கு 5 மைல் வேகத்தில் ஒருவர் ஒரு மணி நேரம் வேகமாக நடந்தால், சுமார் 610 கலோரிகளை செலவிட முடியும். ஓட்டப் பயிற்சி அல்லது ஹிட் பயிற்சிகளைப் போல, இந்த நடைபயிற்சியில் மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் ஏற்படுவதில்லை. இதனால், உடல் எடையை குறைப்பதில் நடைபயிற்சி ஒரு சிறந்த பங்கு வகிக்கிறது.
தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொள்வது வயதாகும் நிகழ்வை தாமதப்படுத்துகிறது. மேலும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை கூட குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, நடைபயற்சி செய்வதால் தசைக்கூட்டு கோளாறுகளின் வலி நிவாரணம் கிடைக்கிறது, நல்ல தூக்கம் கிடைக்கிறது, மன ஆரோக்கியம் மேம்படுகிறது. எந்தவிதமான உடல் செயல்பாடும் இல்லாத வயதானவர்களை விட, வாரத்தில் 2.5 மணி நேரம் வேகமாக நடைபயிற்சி செய்பவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் அபாயம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
ஜப்பானிய வலைப்பதிவர் ஒருவர் குறிப்பிடுகையில், வெறும் ஆறு நிமிட நடைப்பயிற்சி கூட மனநிலையை மாற்றும் அபார சக்தி கொண்டது; அது ஒரு தியானம் போன்றது என்று கூறியுள்ளார். எனவே, வாரத்தில் 6 நாட்கள் நடைபயிற்சி செய்ய முடியாவிட்டாலும், முடிந்த போதெல்லாம் இந்த ‘6-6-6’ விதியை மனதில் கொண்டு நடைபயிற்சியில் ஈடுபடுவது, ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
Read More : உடல் எடையை மளமளவென குறைக்கும் ரகசிய பொடி..!! வீட்டிலேயே இயற்கையாக தயாரிக்கலாம்..!!



