திருமணமான புதிதில் தம்பதிகள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது பெற்றோருடன் வசிக்காமல் தனியே குடித்தனம் நடத்த வேண்டும் என்ற பிரபல உறவுமுறை ஆலோசகர் அஜய் கே பாண்டேவின் கருத்து, இணையதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்திய குடும்ப அமைப்பில் கூட்டுக் குடும்பங்கள் கொண்டாடப்பட்டாலும், ஒரு புதிய பந்தம் வலுபெற ‘தனிமை’ மற்றும் ‘சுதந்திரம்’ எவ்வளவு அவசியம் என்பதை அவர் முன்வைக்கும் காரணங்கள் ஆழமாக சிந்திக்க வைக்கின்றன.
தம்பதிகள் தனியே வாழ்வதன் மூலம் ஒருவருக்கொருவர் முதலிடம் கொடுக்கும் பழக்கம் உருவாகிறது என்று கூறும் அஜய், “கதவுகள் மூடப்படும்போதுதான் இதயங்கள் திறக்கின்றன” என்று தெரிவித்துள்ளார். குடும்பக் கட்டுப்பாடுகள் மற்றும் மற்றவர்களின் தலையீடு இல்லாத சூழலில், தம்பதிகள் தங்களுக்குள் வெளிப்படையாக பேசவும், விவாதிக்கவும், சிரிக்கவும் முடிகிறது. இது அவர்களுக்குள் இருக்கும் உணர்வுப்பூர்வமான இடைவெளியைக் குறைத்து, நம்பிக்கையை துளிர்விட செய்கிறது. குறிப்பாக, எந்த விதமான சமூக சடங்குகளையும் விட இருவருக்கும் இடையிலான காதலுக்கே முன்னுரிமை அளிக்க இது வழிவகுக்கிறது.
மேலும், திருமணத்திற்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களை தவிர்க்கவும் இந்த தனிமை உதவுகிறது. உணவுப் பழக்கம் முதல் உடை வரை மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகாமல், தங்களது விருப்பப்படி வாழும் சுதந்திரம் அவர்களுக்கு கிடைக்கிறது. “இரவு உணவை தவிர்த்துவிட்டு பீட்சா ஆர்டர் செய்வது, படுக்கையில் அமர்ந்து அரட்டை அடிப்பது” என எவ்வித விதிகளும் இல்லாத ஒரு தனி உலகம், தம்பதிகளிடையே ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது. கூட்டுக்குடும்பம் என்பது ஒரு பலம் என்றாலும், ஒரு புதிய உறவின் அஸ்திவாரம் உறுதியாக அமைய சில ஆண்டுகள் தனித்து வாழ்வது அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
Read More : செல்வமகள் சேமிப்பு திட்டத்தை விடுங்க..!! இதில் ரூ.1,000 முதலீடு செய்தால் ரூ.11.57 கோடி வரை கிடைக்கும்..!!



