திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக எம்.பிக்கள் தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.. திருப்பரங்குன்றத்தில் மத மோதல்களை உருவாக்க முயல்வதாக திமுக குற்றம்சாட்டி உள்ளது.. கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.. கேள்வி நேரம் முடிந்த பின்னர் பேசலாம் என்று சபாநாயகர் கூறிய நிலையில், அதனை ஏற்காத திமுக எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.. நீதி வேண்டும், நீதி வேண்டும் என்று தமிழில் முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்..
இந்த நிலையில் மக்களவை மீண்டும் கூடியது திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.. அப்போது திமுக எம்.பி டி.ஆர். பாலு “ திருப்பரங்குன்றம் விவகாரம் கவலை அளிக்கிறது.. திருப்பரங்குன்றத்தில் தர்காவுக்கு அருகே தீபம் ஏற்றி மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர்.. வழக்கத்தை மீறும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள சுயநல சக்திகளால் வகுப்புவாத மோதல்கள் தூண்டப்பட்டுள்ளது.. இந்த விவகாரத்தில் உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்.. அவரின் தீர்ப்பால் திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.. அங்கு மத மோதலை உருவாக்கப் பார்க்கின்றனர் என்று தெரிவித்தார்..
ஆனால் ஜி.ஆர். சாமிநாதன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என டி.ஆர். பாலு பேசியதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்தார்.. டி.ஆர் பாலு கூறியது போல் நாட்டின் எந்த நீதிபதியையும் உள்நோக்கத்துடன் குறிப்பிட முடியாது என்று கூறினார்.. உயர்நீதிமன்ற நீதிபதியை எப்படி இவ்வாறு குறிப்பிட முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர் டி.ஆர் பாலுவின் இந்த கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரினார்.. இதை தொடர்ந்து டி.ஆர் பாலுவின் பேச்சுக்கு பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதை தொடர்ந்து அவரின் கருத்து அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் திருப்பரங்குன்றத்தில் மக்களின் வழிபாட்டு உரிமையை தமிழ்நாடு தடுப்பதாக குற்றம்சாட்டினார்.. மேலும் “ உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் மக்கள் செல்ல தமிழக அரசு அனுமதிக்கவில்லை.. இது அரசின் அராஜக செயல்.. இறைவனை வழிபடுவது என்ற மக்களின் அடிப்படை உரிமையை தடுக்கும் செயலை திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது..” என்று தெரிவித்தார்..



