இன்றைய நவீன வாழ்க்கை முறையின் காரணமாக, முதியவர்களை விட இளைய தலைமுறையினரே அதிக அளவில் உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு போன்ற வாழ்வியல் நோய்களுக்கு ஆளாகின்றனர். மாரடைப்பால் இளவயதினர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாத ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களே ஆகும்.
சாதாரண உடற்தகுதி கொண்ட இளைஞர்கள், நடைப்பயிற்சியை விட ஜாகிங் என்னும் மிதமான ஓட்டத்தை வழக்கமாக கொள்வது பல மடங்கு நன்மைகளைத் தரும் என சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தினசரி 30 நிமிடங்கள் ஜாகிங் செய்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இதய ஆரோக்கியம் : ஜாகிங் ஒரு சிறந்த கார்டியோவாஸ்குலர் பயிற்சி என்பதால், இது இதயத்தை வலுவாக்கி, மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், இது கெட்ட கொழுப்பை (கொலஸ்ட்ரால்) எரிக்கவும் பெரிதும் உதவுகிறது.
உடல் எடை குறைப்பு : ஜாகிங் அதிக கலோரிகளை எரிக்க உதவுவதால், உடலில் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் எடை விரைவாகக் குறைகிறது. இது செரிமான மண்டல ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
ரத்த அழுத்தம் கட்டுப்பாடு : இந்தப் பயிற்சி ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, இரத்த நாளங்களை விரிவடைய செய்வதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதனால் பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து குறைகிறது.
மனநலம் மற்றும் ஆற்றல் : ஜாகிங் பயிற்சி மனச் சோர்வு மற்றும் மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது. ஓடும்போது வெளியாகும் மகிழ்ச்சி உணர்வை அளிக்கும் ஹார்மோன்கள் மனநிலையை மேம்படுத்துகின்றன. மேலும், இது உடலின் ஸ்டாமினா மற்றும் ஆற்றல் அளவை அதிகரிப்பதால், நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
எலும்பு மற்றும் தசை பலம் : ஜாகிங் எலும்பு மெலிதல் நோயைத் (Osteoporosis) தடுக்க உதவுகிறது. இது மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடல் முழுவதிலும் உள்ள தசைகளையும் வலுவாக்குகிறது.
எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்குத் திரும்ப விரும்பும் இளைஞர்களுக்கு, தினமும் 30 நிமிடங்கள் மேற்கொள்ளும் ஜாகிங் பயிற்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Read More : எந்த நாட்டில் கள்ளக்காதலுக்கு அனுமதி தெரியுமா..? இங்கு ஆண்களை விட பெண்களே அதிகம்..!!