உடல்நலம் குறித்துப் பேச்சு வந்தாலே, பெரும்பாலோர் முதலில் நினைப்பது “10,000 படிகள் நடக்க வேண்டும்” என்பதே. இது நீண்ட காலமாகவே ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் ஒரு பொதுவான பரிந்துரையாக இருந்து வந்தாலும், தற்போது ஜப்பானில் இருந்து வந்த ஒரு புதிய நடைபயிற்சி முறை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நடைபயிற்சிக்கு “இடைவெளி நடைபயிற்சி” (Interval Walking) என்றே பெயர். நிபுணர்கள் இதனை பாரம்பரிய நடைபயிற்சியைவிட மேம்பட்டதாக கருதுகின்றனர். இந்த நடைமுறை மிக எளிமையானது. அதே நேரத்தில், அதன் நன்மைகளும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியவையாகவும் உள்ளன.
ஒருவர் ஒரு குறிப்பிட்ட நேரம் வேகமாக நடந்து, அதற்குப் பின்னர் மெதுவாக நடக்கும். இப்படிச் சுழற்சி முறையில் தொடர்ந்து 20 முதல் 30 நிமிடங்கள் வரை பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பயிற்சி முறையைப் பற்றி விரிவாகப் பேசும் டாக்டர் சௌரப் சேதி, ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில் இதன் மருத்துவ நன்மைகளை விளக்குகிறார்.
“மூன்று நிமிடங்கள் வேகமாகவும், மூன்று நிமிடங்கள் மெதுவாக நடக்க வேண்டும். இந்த சுழற்சி முறையை சில தடவைகள் தொடர்ந்து செய்வது, பாரம்பரிய 10,000 படிகள் நடைபயிற்சியைவிட கூடுதல் நன்மைகளைத் தருகிறது” என்கிறார்.
இடைவெளி நடைபயிற்சியின் அடிப்படை கட்டமைப்பு சில எளிய கட்டுப்பாடுகளில்தான் அமைகிறது. ஆரம்பத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை லேசான நடை அல்லது ஸ்ட்ரெச்சிங் மூலம் உடலைத் தயார்படுத்த வேண்டும். பின்னர், இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வேகமாக நடந்து, அதற்குப் பிறகு அதே நேரத்திற்கு மெதுவாக நடக்க வேண்டும். இதனை 20-30 நிமிடங்கள் வரை தொடரலாம். பயிற்சியின் முடிவில், மேலும் 5-10 நிமிடங்கள் மெதுவாக நடந்து உடலை சீராக்க வேண்டும்.
இந்த நடைமுறையின் நன்மைகள் பட்டியலிட்டு முடிக்க முடியாத அளவில் இருக்கின்றன. கலோரிகள் வேகமாக எரிகின்றன. உடல் எடை குறைவதுடன், வளர்சிதை மாற்ற வேகம் கூடுகிறது. இதனால் ஓய்விலும் உடல் கலோரி எரிக்கக்கூடிய திறனை வளர்த்துக்கொள்கிறது. இரத்த அழுத்த கட்டுப்பாடு, மனநிலை தூண்டுதல், தூக்கத்தை மேம்படுத்தல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவது போன்ற பல்வேறு மருத்துவ நன்மைகளும் இதில் அடங்கும்.
அதுமட்டுமல்லாமல், ஓடுவதுடன் ஒப்பிடும்போது, இந்த நடைமுறை மூட்டுகளில் அதிக அழுத்தம் ஏற்படுத்தாது. எனவே, மூட்டு நலன் குறித்த கவலை கொண்டவர்கள் கூட இதை நிம்மதியாக மேற்கொள்ளலாம். ஆரம்பிக்க விரும்புபவர்கள், சுலபமாக பின்பற்றக்கூடிய மூன்று கட்டங்களை ஞாபகத்தில் வைக்க வேண்டும். முதலில், 3-5 நிமிடங்கள் சாதாரண வேகத்தில் நடக்க வேண்டும். பிறகு, வேகமான மற்றும் மெதுவான நடை முறைகளை மாறி மாறி செய்ய வேண்டும். இறுதியில், மீண்டும் 3-5 நிமிடங்கள் மெதுவாக நடந்து பயிற்சியை முடிக்கலாம்.
இந்த நடைமுறையை தினசரி வாழ்க்கையில் இணைத்துக் கொள்ளும்போது, அது உடல் எடையை கட்டுப்படுத்துவதையும், உடல்நலம் முழுமையாக மேம்பட உதவுவதையும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த சில மாதங்களில் இது பல்வேறு நாடுகளில் வேகமாக பிரபலமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.