உடல் ஆரோக்கியமாக இருக்க, சரியான உணவுப் பழக்கங்களுடன் தினசரி உடற்பயிற்சியும் அவசியம். குறிப்பாக, அதிகாலையில் நாம் எடுத்துக்கொள்ளும் சில ஆரோக்கிய பானங்கள் உடலின் ஒட்டுமொத்த நலனையும் மேம்படுத்த உதவுகின்றன. அப்படிப்பட்ட பானங்களில், நம் வீட்டு அஞ்சறை பெட்டியில் உள்ள சீரகம், ஓமம், மற்றும் சோம்பு ஆகிய மூன்றையும் சேர்த்து ஊற வைத்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
செரிமானம் முதல் சருமம் வரை : இந்த 3 விதைகளிலும் செரிமான ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. சீரகம் செரிமான அமிலத்தின் உற்பத்தியை தூண்டுகிறது, ஓமம் அஜீரணக் கோளாறுகளை தடுக்கிறது, சோம்பு வாய்வு மற்றும் வயிற்று உப்புசத்தை குறைக்க உதவுகிறது. இந்த மூன்றும் சேர்ந்த நீரை உட்கொள்ளும்போது, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, செரிமான செயல்பாடு சிறப்பாக நடைபெறுகிறது.
எடை இழப்பு மற்றும் உடல் சுத்திகரிப்பு : உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த நீர் ஒரு சிறந்த உதவியாகும். சீரகம் மற்றும் ஓமம் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கலோரி எரிப்பை தூண்டுகிறது. அதே சமயம், சோம்பு உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறையை மேம்படுத்துகிறது. போதுமான உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடுடன் இந்த நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், எடை இழப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம். மேலும், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
குடல் மற்றும் சரும ஆரோக்கியம் : இந்த 3 விதைகளிலும் உள்ள நார்ச்சத்து, இரும்புச்சத்து, மற்றும் வைட்டமின்கள் குடல் நுண்ணுயிர்களை மேம்படுத்தி, ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை பலப்படுத்துகின்றன. ஆரோக்கியமான குடல், வலுவான நோயெதிர்ப்பு சக்திக்கு அடித்தளமிடுகிறது. இதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுவது தடுக்கப்படுகிறது. மேலும், சீரகம் மற்றும் சோம்பில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள், செரிமானத்தைச் சீராக்குவதன் மூலம், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உள்ளிருந்து சரி செய்து, சரும ஆரோக்கியம் மற்றும் பொலிவை இயற்கையாகவே மேம்படுத்துகின்றன.
செய்முறை :
ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் சோம்பு, 1 ஸ்பூன் ஓமம் ஆகியவற்றை எடுத்து, போதுமான நீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில், அந்நீரை கொதிக்க வைத்து வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்கலாம். தேவைப்பட்டால், சுவைக்காக சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாற்றை சேர்த்து அருந்தலாம்.
Read More : மெட்டியை வெள்ளியில் மட்டும் ஏன் அணிய வேண்டும் தெரியுமா..? ஜோதிடம் சொல்லும் உண்மை காரணம் இதுதான்..!!