இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், பெரும்பாலான பயனர்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மாறி வருகின்றனர். எனினும், ஒரு நாளைக்கு 2 ஜிபிக்கும் குறைவாக தினசரி டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, ஜியோ நிறுவனம் தற்போது ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.601 செலுத்தி, ஒரு வருடத்திற்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஒரு சிறப்பு வவுச்சரை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.
யாரெல்லாம் பயன்படுத்தலாம்..?
பொதுவாக, ஜியோ நிறுவனம் தினமும் 2 ஜிபி அல்லது அதற்கு மேல் டேட்டா வழங்கும் திட்டங்களில் ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இலவசமாக வரம்பற்ற 5ஜி சேவையை வழங்கி வருகிறது. ஆனால், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி தினசரி டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் 5ஜி சேவையைப் பெற வசதியாகவே இந்த ரூ.601 திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் ஏற்கனவே ரூ.199, ரூ.239, ரூ.299, ரூ.319 போன்ற பிரபலமான ரீசார்ஜ் திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, 1.5 ஜிபி தினசரி டேட்டா பேக்கைத் தங்கள் அடிப்படை ரீசார்ஜ் ஆகக் கொண்டவர்கள் இந்த ரூ.601 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.
ரூ.601 திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
ஜியோவின் இந்த ரூ.601 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, வரம்பற்ற 5ஜி டேட்டா பெறுவதற்கான 12 சிறப்பு வவுச்சர்கள் ஒரு வருட காலத்திற்கு வழங்கப்படும். இதன் மூலம், வாடிக்கையாளர் ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு வவுச்சரை MyJio செயலி மூலம் மீட்டெடுத்து (Redeem) வரம்பற்ற 5ஜி டேட்டாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், இந்தச் சலுகையின் கீழ், பயனர்கள் வரம்பற்ற 5ஜி டேட்டாவுடன், ஒரு நாளைக்கு 3 ஜிபி கூடுதல் 4ஜி டேட்டாவையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு வவுச்சர்கள் ரூ.51 (ஒரு மாதத்திற்கு), ரூ.101 (இரண்டு மாதங்களுக்கு), ரூ.151 (மூன்று மாதங்களுக்கு) என்ற விலைகளில் கிடைக்கிறது. மேலும், இந்த ரூ.601 டேட்டா வவுச்சரை MyJio செயலி மூலம் மற்ற ஜியோ பயனர்களுக்கும் பரிசாகவும் அனுப்பும் வசதி உள்ளது. அடிப்படை திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வரை இந்த 5ஜி வவுச்சரும் செயல்படும்.