தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்களை வெட்ட இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரம் மட்டுமல்ல, தமிழ் மக்களின் வாழ்வோடும், பண்பாட்டோடும் கலந்த ஒரு மரமாகும். இதன் அனைத்து பாகங்களும் மனித பயன்பாட்டுக்கு உதவுகின்றன. பனை ஓலைகள் கூரைக்கும், கைவினைப் பொருட்கள் செய்யவும் பயன்படுகின்றன. பனை மரத்தின் நுங்கு, பதநீர், கருப்பட்டி போன்ற உணவுப் பொருட்கள் மூலம் பல குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறுகின்றன.
இந்நிலையில், சமீப காலமாக நகரமயமாக்கல் மற்றும் விவசாய நிலங்களின் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பனை மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்தப் போக்கு நீடித்தால், பனை மரங்கள் முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது.
இதை உணர்ந்த தமிழ்நாடு அரசு பனை மரங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, இனி பனை மரங்களை வெட்ட விரும்பும் எவரும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். பனை மரங்களை வெட்ட அனுமதி கோரும் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் கிடைத்தவுடன், அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று, மரம் வெட்டப்பட வேண்டியதன் அவசியத்தை ஆராய்வார்கள். தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த உத்தரவு பனை மரங்களை வெட்டுவோரின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : வியாழன் பிரதோஷம்..!! இன்று சிவபெருமானை இப்படி வழிபடுங்க..!! கோடி புண்ணியம் கிடைக்கும்..!!