கமல்ஹாசன், வில்சன் உள்ளிட்ட 6 தமிழக எம்.பிகள் இன்று மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழ்நாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் திமுகவில் வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரும் மாநிலங்களவை எம்பிக்களாக இருந்தனர். இவர்களின் பதவிக்காலம் நேற்றுடன் தேதியுடன் முடிவடைந்தது.. மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று தமிழக எம்.பிக்கள் தங்களின் இறுதி உரையை ஆற்றினர்..
இதனிடையே இந்த 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.. திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த 6ஆம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதேபோல், அதிமுக சார்பில் இன்பத்துரை, தனபால் ஆகியோரும் 6ஆம் தேதியன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
இதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணி வேட்பாளர்கள் வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகியோர் தாக்கல் செய்த வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது. மேலும் அதிமுக சார்பில் போட்டியிடும் தனபால், இன்பதுரை ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டது.
வேட்பு மனு உடன் ஒரு வேட்பாளருக்கு 10 எம்.எல்.ஏக்கள் முன்மொழிவு கடிதம் அளித்திருக்க வேண்டும். அந்த வகையில், முன் மொழிவு கடிதம் இருக்காது என்பதால் சுயேச்சைகளின் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து திமுக, அதிமுகவை சேர்ந்தவர்கள் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டனர்.. போட்டியின்றி தேர்வானதற்கான சான்றிதழ்களும் 6 பேருக்கும் வழங்கப்பட்டது..
இந்த நிலையில் திமுக கூட்டணி சார்பில் தேர்வான 4 எம்.பிக்களும், அதிமுகவின் 2 எம்.பிக்களும் என 6 தமிழக எம்.பிகள் இன்று மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டனர். ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தமிழில் பதவியேற்றுக் கொண்டார், அதற்கான ஆவணங்களிலும் அவர் கையெழுத்திட்டார். திமுகவின் வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகியோரும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.. அதே போல் அதிமுகவின் தனபால், இன்பதுரை ஆகியோரும் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர்..
Read More : Intel பணிநீக்கம்.. 25,000 பணியிடங்களுக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..