கோயில் நகரமாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் சிவன், விஷ்ணு, அம்மன், முருகன் உள்ளிட்ட ஏராளமான கோயில்கள் உள்ளது. அந்த வகையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக உலகளந்தார் பெருமாள் கோயில் திகழ்கிறது.
திருமாலின் 108 திவ்ய தேசங்களில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த கோவில் அதன் தனித்துவமான அமைப்பு மற்றும் ஆன்மிகச் சிறப்புகளால் பக்தர்களை ஈர்த்துவருகிறது. இந்த ஆலயம் 47வது திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. இதன் முக்கிய தனிச்சிறப்பு என்னவெனில் ஒரே கோவில் வளாகத்திலேயே திருக்காரகம், திருப்பாடகம், திருஊரகம், திருநீரகம் என நான்கு திவ்ய தேசங்கள் ஒன்றாக அமைந்துள்ளது என்பது தான்.
இது வேறெங்கும் காண முடியாத அரிய அமைப்பாகும். உலகளந்த பெருமாள் கோயில் மூலவர் சிலை பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. பெருமாள் சுமார் 35 அடி உயரமும், 24 அடியும் அகலம் கொண்ட பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார். தனது இடது காலை விண்ணை நோக்கி தூக்கியும், வலது காலை பூமியில் வைத்தவாறு காட்சியளிக்கிறார். இந்தத் தோற்றம், வாமன அவதாரத்தில் விஷ்ணு மஹாபலி மன்னனிடமிருந்து மூன்று அடிகள் நிலம் பெற்ற காட்சியை பிரதிபலிக்கிறது.
பாகவத புராணத்தின் படி, மகாபலியின் தலையில் மூன்றாவது அடியை வைத்து உலகை அளந்த பெருமாளே இங்கு திரிவிக்ரமன் எனவும், உலகளந்த பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். இந்தக் கோவில் வளாகத்தில் உள்ள நான்கு தலங்களில், திருஊரகம் குழந்தைப் பேறு வேண்டுவோருக்கு மிகவும் புனிதமான தலமாகக் கருதப்படுகிறது. திருக்காரகம், திருப்பாடகம் மற்றும் திருநீரகம் ஆகியவை தல வரலாற்று சிறப்புகளுடன் பக்தர்களின் மனதில் இடம் பெற்றுள்ளன.
மூன்றாம் நந்திவர்மன் காலத்து கல்வெட்டு கோயிலில் கிடைத்திருப்பதால், குறைந்தது இந்த கோயில் 1200 ஆண்டுகள் பழமையானது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பல்லவர், சோழர், விஜயநகரர் மற்றும் நாயக்கர் அரசர்களால் பெரிதும் வளர்ச்சியடைந்த இந்த ஆலயம், காமாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது. மூன்று தள ராஜகோபுரம், நாக தீர்த்தம் மற்றும் தனிச் சன்னதியில் அமிர்தவல்லி நாச்சியார் ஆகியவை இக்கோவிலின் முக்கிய அம்சங்களாகும்.
வாமன ஜெயந்தி, தை மாத பிரம்மோற்சவம், சித்திரை தேர்த்திருவிழா மற்றும் மார்கழி வைகுண்ட ஏகாதசி போன்ற பண்டிகைகள் இங்கே மிகுந்த கோலாகலத்துடன் நடைபெறுகின்றன. மேலும், சங்கு சக்கரம் ஏந்திய ஆஞ்சநேயரின் அரிய சிலை பக்தர்களுக்கு தனித்துவமான தரிசன அனுபவத்தை அளிக்கிறது.