முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் தனிச்சிறப்புப் பெறுவது கந்த சஷ்டி விரதம். மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் சஷ்டி திதிகள் வந்தாலும், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே ‘கந்த சஷ்டி’ அல்லது ‘மகா சஷ்டி’ என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த மகா சஷ்டியின்போது பக்தர்கள் முருகனை வேண்டி சிறப்பு விரதம் மேற்கொள்வது வழக்கம்.
ஐப்பசி மாதத்தில் தான் முருகப்பெருமான் சூரபத்மனை அழித்து தேவர்களைக் காத்தருளினார். அதன் அமாவாசைக்கு அடுத்த வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி, சப்தமி திதி வரை ஏழு நாட்கள் இந்த கந்த சஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது. சஷ்டி நாளன்று நடைபெறும் சூரசம்காரத்தைக் பக்தர்கள் தரிசனம் செய்வர். அடுத்த நாளான சப்தமி திதியில் முருகப்பெருமானின் திருக்கல்யாணத்தை தரிசித்த பிறகே பக்தர்கள் தங்கள் விரதத்தை நிறைவு செய்வார்கள்.
இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விரதம் நேற்று (அக்.22) தொடங்கி, வரும் 27 ஆம் தேதி சூரசம்கார நிகழ்வுடன் முடிவடைகிறது. விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் கோயில்களுக்குச் சென்று காப்பு கட்டிக்கொண்டு, வரும் 28-ஆம் தேதி வரை கடைப்பிடிக்க உள்ளனர்.
இந்நிலையில், திருநெல்வேலியை சேர்ந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர் சிவா, கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள் குறித்து கூறுகையில், “மிளகு விரதம், இளநீர் விரதம் என கந்த சஷ்டி விரதத்தில் பல முறைகள் உள்ளன. பொதுவாக ஒரு வார காலம் கடைப்பிடிக்கப்படும் இந்த விரதத்தை, தீவிர முருக பக்தர்கள் 48 நாட்கள் வரை கூட மேற்கொள்வதுண்டு.
விரத நாட்களில் வீட்டை மஞ்சள் நீர் தெளித்துச் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். காலை, மாலை வேளைகளில் முருகப்பெருமானுக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும். விரதமிருப்பவர்கள் பகலில் தூங்கக் கூடாது. கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், கந்தர் அலங்காரம், திருப்புகழ் போன்ற முருகப் பாடல்களை இடைவிடாது பாடி இருக்க வேண்டும்.
மேலும், கோயில்களில் உள்ள முருகன் சிலைகளுக்குப் பச்சை மற்றும் மஞ்சள் நிற வஸ்திரங்களை வாங்கி சமர்ப்பிக்கலாம். நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேற வெள்ளை அரளிப்பூவையும், சூரசம்காரம் நடைபெறும் அன்று சிவப்பு அரளிப்பூவையும் முருகனுக்கு வாங்கி கொடுப்பது சிறப்பு” என்றார்.
மேலும், இந்த விரதத்தின் பலன்கள் குறித்து விவரித்த அவர், “சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் ஆண் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. பணி செய்யும் இடங்களில் உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பும், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய சந்தர்ப்பமும் உண்டாகும். சஷ்டி விரதம் முடிந்த பிறகு நடைபெறும் முருகப்பெருமானின் திருக்கல்யாணத்தை காண்பது மிகவும் விசேஷமானது.
இதன் மூலம் திருமணம் நடைபெறாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேருவார்கள். பேச்சுத் திறன் குறைவாக உள்ள அல்லது திக்கிப் பேசும் குழந்தைகளுக்குத் தேன் வாங்கி வந்து முருகனுக்குச் சமர்ப்பித்து, அவர்களுக்குத் திருப்புகழைப் பாட வைக்கலாம் அல்லது கேட்கச் செய்யலாம்.
இதன் மூலம் குழந்தைகளுக்குப் பேச்சுத்திறன் மேம்படும். கந்த சஷ்டி விரத காலத்தில் சுப நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, விரதம் முடிந்த பிறகு சுப நிகழ்வுகளை நடத்தினால், முருகப்பெருமானே முன்னின்று அவற்றைச் சீரும் சிறப்புமாக நடத்துவார் என்பது ஐதீகம்” என்று தெரிவித்தார்.
Read More : புயல் கிடையாது… ஆனாலும் இந்த மாவட்டத்தில் 27-ம் வரை கனமழை தொடரும்..! வானிலை மையம் எச்சரிக்கை…!



