ஒளியை வழிபாடாக மாற்றிய இந்து பண்பாட்டில், தீபத் திருநாள்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. தீபாவளிக்கு அடுத்ததாக பெருமையுடன் கொண்டாடப்படுவது திருக்கார்த்திகை தீபத் திருவிழா. குறிப்பாக தமிழ்நாட்டில், இந்த நாள் ஆன்மிகம், மரபு, நம்பிக்கை ஆகியவை ஒன்றிணையும் புனிதத் திருநாளாகக் கருதப்படுகிறது.
வீடுகளில் அகல்விளக்குகள் ஏற்றி, இருள் விலகி வெளிச்சம் பெருக வேண்டும் என்ற அடையாளத்துடன் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. “வீட்டில் விளக்கேற்றாத கார்த்திகை இல்லை” என்பதே முன்னோர்களின் நெறி. இந்த நாளில் வீட்டில் எவரும் இல்லாவிட்டாலும், உறவினர் அல்லது நண்பர்களிடம் சொல்லி வாசலில் குறைந்தது ஒரு விளக்காவது ஏற்ற வேண்டும் என்பது முக்கியமான மரபு.
கார்த்திகை தீபம், வளங்களையும் நன்மைகளையும் தரும் நாள் என்று நம்பப்படுகிறது. அதனாலேயே இந்த நாளில் எக்காரணம் கொண்டும் கடன் வாங்கக் கூடாது என்று முன்னோர்கள் எச்சரித்துள்ளனர். கடன் வாங்குவது வாழ்க்கையில் செலவழுத்தத்தையும் வறுமையையும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையே இதன் பின்னணி.
கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்றும் முறையும் சிறப்பும்: பொதுவான நாட்களில் எந்த திரியைக் கொண்டும் விளக்கேற்றினாலும், கார்த்திகை தீபத்தன்று மட்டும் குறிப்பிட்ட திரிகளை பயன்படுத்துவது உத்தமமாகப் பார்க்கப்படுகிறது. வாழைத்தண்டு திரி, தாமரைத் தண்டு திரி அல்லது தூய காட்டன் திரி இதில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி விளக்கேற்றினால், அந்த தீபத்தின் பலன் பலமடங்கு பெருகும் என நம்பப்படுகிறது.
கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்படும் விளக்கில் பயன்படுத்தும் எண்ணெய்க்கும் தனித்தனி ஆன்மிக அர்த்தங்கள் கூறப்படுகின்றன.
பசு நெய் – மன ஒருமைப்பாடு, வளமான வாழ்க்கை
நல்லெண்ணெய் – செல்வ வளம் அதிகரிக்கும்
விளக்கெண்ணெய் – புகழ் மற்றும் மரியாதை
வேப்ப எண்ணெய் – கணவன்–மனைவி ஒற்றுமை
தேங்காய் எண்ணெய் – குலதெய்வ அருள்
இலுப்பை எண்ணெய் – ஐஸ்வரியம், மன நிம்மதி.



