கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்துப் பல தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு, தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்படப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட போலீசார், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள் மற்றும் மத்திய மின்துறை நிறுவனத்தின் அதிகாரிகள் எனப் பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நெரிசலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரைச் சி.பி.ஐ. குழுவினர் நேரில் சந்தித்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும், த.வெ.க. கட்சியின் சார்பில், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கரூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு, தற்போது திருச்சி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணைக் குழுவில் மேலும் 2 பெண் சி.பி.ஐ. அதிகாரிகளும் புதிதாக இணைந்துள்ளனர். வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, பிப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் களத்தின் முக்கியத்துவம் மற்றும் காலக்கெடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே வழக்கில் குற்றப்பத்திரிகையை திருச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More : திருமண காப்பீடு பற்றி தெரியுமா..? என்னென்ன நிகழ்வுகளுக்கு கிளைம் செய்ய முடியும்..?



