தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட மோசமான கூட்ட நெரிசலின் காரணமாக, குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 39 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரூர் நகரில் முழுமையான கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தனது 3ஆம் கட்டப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். விஜயைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். தவெக நிர்வாகிகள் 10,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால், நிகழ்விடத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கிப் 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கரூரில் நடந்த இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இன்று கரூர் நகரில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் இயங்காது என்று வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.



