கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் விஜயை தொடர்பு கொண்டு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் உயிரிழந்தனர். தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. மத்திய அரசு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. தவெக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்தில் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்ட 4 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தவெக தலைவர் விஜயை செல்போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலுக்கான காரணம், நடந்தது என்ன எனவும் தவெக தலைவர் விஜயிடன் ராகுல்காந்தி கேட்டறிந்தார். இருவரும் 15 நிமிடங்கள் செல்போனில் பேசியுள்ளனர். திமுக கூட்டணி கட்சிகள் விஜயை விமர்சித்து வரும் நிலையில், ராகுல் காந்தி விஜயிடம் பேசியது அரசியல் வட்டார்த்தில் பேசுபொருளாகியுள்ளது.
Read more: இந்தியன் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு.. ரூ.1,20,940 வரை சம்பளம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!