கரூரில் தவெக பிரச்சாரத்தில் நேற்று நடைபெற்ற கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இதனைப்பற்றி பரவிய தகவல்கள் வைரலாக பரவும் நிலையில், சிலர் விஜய் பேசும்போது மின்தடை ஏற்பட்டதே கூட்ட நெரிசலுக்கு காரணம் என தெரிவித்தனர். இந்த நிலையில் மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி விளக்கம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியல் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜய் பேசும்போது மின்சாரம் முழுமையாக இருந்தது என்றும் அருகே இருந்த கடைகளில் விளக்குகள் எரிந்து கொண்டு இருப்பதை வீடியோக்களில் பார்க்க முடிகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும், தவெகவினர் வைத்திருந்த ஜெனரேட்டர்கள் மற்றும் விளக்குகள் கூட்ட நெரிசலால் அணைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், விஜய் வருவதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி, தவெகவினரே மின் இணைப்பு துண்டிக்க சொன்னதாகவும் இருப்பினும், அந்த கோரிக்கையை மின்வாரியம் மறுத்துவிட்டதாகவும் ராஜலட்சுமி கூறினார்.
தொடர்ந்து, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பேசுகையில், “தவெக முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான இடம். அவர்கள் கேட்ட உழவர் சந்தையும் மிகவும் குறுகலான இடம். அதனால்தான் அண்மையில் மற்றொரு கட்சி (அதிமுக) 10 ஆயிரம் – 15 ஆயிரம் பேர் கூட்டி கூட்டம் நடத்திய வேலுச்சாமிபுரத்தை பரிந்துரைத்தோம். அதை ஏற்றுக்கொண்டு தவெகவினரும் மனு கொடுத்து அந்த இடத்தில் பரப்புரைக்கு அனுமதி பெற்றனர். மேலும் தவெக பரப்புரையில் கல்வீச்சு ஏதும் நடைபெறவில்லை. விஜய் பேசும்போது மின்தடை செய்யப்படவில்லை” என்றார்.