கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் விசாரணை மேற்கொண்டு வந்தது.
இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 2 ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இது இடைக்கால உத்தரவு மட்டுமே என்பதை தெளிவுப்படுத்திய உச்சநீதிமன்றம், தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்யும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன்படி இந்த வழக்கை கடந்த மாதம் 19-ம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் கரூரில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், வீடியோகிராபர்கள், ஆம்புலன்ஸ் ட்ரைவர்கள், கடை உரிமையாளர்கள், தவெக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என 306 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி, அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
இந்த சூழலில் கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு இன்று கரூர் வந்துள்ளது.. இந்த குழுவின் வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. மேலும் இந்த குழுவிடம் கரூர் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக மனு அளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் நேற்று அறிவித்திருந்தது.. அதன்படி பொதுமக்கள் மனு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் சிபிஐ விசாரணையை ரத்து செய்து விட்டு சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த SIT வசம் விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் காவல்துறை விசாரணை சரியான திசையில் தான் சென்று கொண்டிருந்தது என்றும், பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட்டது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.. அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை மீண்டும் தொடரும் வகையில் தடை உத்தரவை நீக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : இது லிஸ்ட்லயே இல்லையே..!! தவெகவில் இணையும் 2 திமுக அமைச்சர்கள்..!! பரபரப்பை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா..!!



