கரூர் சம்பவத்தில் பிரதேச பரிசோதனைக்கு எத்தனை மேஜைகள் அமைத்தார்கள் என்பதில் இத்தனை குழப்பம் ஏன்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்..
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இதுகுறித்து தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கரூர் சம்பவம் நடந்து 2 வாரங்களை கடந்தும் இன்னும் இதுதொடர்பான விவாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.. அந்த வகையில் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கரூர் சம்பவம் தொடர்பாக என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். முதல்வரின் விளக்கத்தை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரவில் ஏன் உடர்கூறாய்வு செய்யப்பட்டது? எப்படி ஒரே இரவில் 41 உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டது..? என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.. அதற்கும் மருத்துவ நல்வாழ்வு அமைச்சர் உரிய விளக்கம் அளித்தார்..
அண்டை மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு 5 மேஜைகளில் உடற்கூராய்வு செய்யப்பட்டது என்று அமைச்சர் விளக்கினார்.. மேலும் ஒரே இரவில் உடற்கூறாய்வு செய்து முடிக்கப்படவில்லை அடுத்த நாள் அதாவது செப்டம்பர் 28-ம் தேதி மாலை வரை உடற்கூறாய்வு நடந்தது என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் பிரதேச பரிசோதனைக்கு எத்தனை மேஜைகள் அமைத்தார்கள் என்பதிலே இத்தனை குழப்பம் ஏன்? என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்..
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கரூரில் தவெக கூட்டத்தில், நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் உடல்களை, 5 மேஜைகளில் 25 மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தார்கள் என்று, நேற்று சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார். ஆனால், சட்டப்பேரவைக்கு வெளியே பேசிய சட்டத்துறை அமைச்சர், 8 மேஜைகளில் பிரேத பரிசோதனை நடைபெற்றது என்று கூறியிருக்கிறார். பிரேத பரிசோதனைக்கு எத்தனை மேஜைகள் அமைத்தார்கள் என்பதிலே இத்தனை குழப்பம் ஏன்?” என்று குறிப்பிட்டுள்ளார்.. மேலும் அமைச்சர்கள் பேசிய வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்..