கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய அவர் தவெக அனுமதி கேட்டது முதல் கரூர் துயரத்திற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் வரை விரிவாக விளக்கம் அளித்தார்.. மேலும் விஜய் தாமதமாக வந்தது கூட்ட நெரிசலுக்கு காரணம் என்றும், கூட்டம் அதிகமாக இருப்பதால் திட்டமிடப்பட்ட இடத்திற்கு முன்பாக பேசும் படி காவல்துறை அறிவுறுத்தியும் தவெகவினர் கேட்கவில்லை என்றும் கூறினார்.. மேலும் ஆம்புலன்ஸ் ஏன் வந்தது? மின்சாரம் ஏன் துண்டிக்கப்பட்டது? இரவில் ஏன் உடற்கூராய்வு செய்யப்பட்டது? அரசு அதிகாரிகள் ஏன் விளக்கம் அளித்தனர் என அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் பதிலளித்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.. அதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.. அப்படி அமைச்சர்கள் பேசும் போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை குறிப்பிட்டு பேசினர்.
ஆனால் தூத்துக்குடி சம்பவம் குறித்து அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி அதிமுகவினர் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.. தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மறுத்ததால் அதிமுகவினர் அனைவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.. அதிமுகவை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏக்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்..
இந்த நிலையில் கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது. இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான ‘நிலையான வழிகாட்டு நெறிமுறை’களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : “ தவெக உடன் அதிமுக கூட்டணி அமைத்தாலும் எந்த பயனும் இல்லை..” முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!



